IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 09

Readhere: Irai Vannakam – EP 01 – Part 02. Irai Vannakam – EP 01 – Part 03 Irai vannakam – EP 01 – Part 04 Irai Vanakam – EP 01 – Part 05 Irai Vanakam – EP 01 – Part 06 Irai Vanakam – EP 01 – Part 07 Irai Vanakam – EP 01 – Part 08
அன்பான நேயர்களே,
ஹஜ்ரத் Spotify சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேட்கிறோம்.
ஹஜ்ரத் அவர்களின் இறை வணக்கம் புத்தகம், எட்டாம் பகுதிக்கு உங்களை வரவேட்கிறோம்.
ஐந்தாம் பண்பு
இறைவன் மிகப் பெரும் வலிமையும் அதிகாரமும் உள்ளவன் மட்டுமல்ல, எல்லையற்ற அன்புக்கும் கரையில்லாத கருணைக்கும் அவனே பிறப்பிடம். மன்னர்களுக்கெல்லாம் மன்னனான அவன், அன்பு செலுத்துகிறவர்கள் அனைவரையும் விடப் பேரன்பு கொண்டவன்; கருணை காட்டுகிறவர்கள் எல்லாரையும் விடப் பெருங்கருணை கொண்டவன்.
எனவே தொழுகையின்போது அவன் கருணையை எதிர்பாருங்கள்; அவன் அன்பு உங்களுக்கு கிடைக்கத் தவறாது என்று நம்புங்கள்; நீங்கள், தெரிந்தோ தெரியாமலோ, செய்த தவறுகளுக்கெல்லாம் மன்னிப்புக் கிடைக்கும் என்று எண்ணுங்கள்.
இப்படி இறைவனின் பெருங்கருணையை எதிர் பார்க்கும் மனப்பண்பு, தொழுகைக்கு முழுமை கொடுக்கும் பண்புகளில் ஐந்தாவதாக இடம் பெறுகிறது. இந்தப்பண்பை ‘இறையாதரவு’ என்று குறிப்பிட்டாலும் தவறில்லை.
சற்று முன்னர் மனித மனத்தில் தோன்றும் அச்சத்தை நான் இரண்டாகப் பிரித்துக் கூறினேன். மனத்தின் பலவீனத்தினால் தோன்றுகிற அச்சத்தை ‘கீழ்த்தரமானது’ என்றும் ஆழ்ந்த கண்ணியத்தினால் பிறக்கிற அச்சத்தை ‘வரவேற்கத்தகுந்தது’ என்றும் குறிப்பிட்டேன். முன்னது நசுக்கப்பட வேண்டும் என்றும் பின்னது வளர்க்கப்பட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தேன். அத்துடன், கீழ்த்தரமான அச்சத்தைப் பயிற்சியின் மூலம் வரவேற்கத தகுந்த அச்சமாக மாற்ற முடியும் என்றும் கூறினேன். இதிலிருந்து, கீழ்த்தரமான அச்சம் எப்போதும் அதே நிலையில் இருப்பதில்லை என்று தெரிகிறது. புலிக்கும் கரடிக்கும் பயப்படுகிறவன், ‘இறைவனின் அனுமதி இல்லாமல் அணுக் கூட அசைவதில்லை’ என்ற இறை வசனத்தை நன்கு புரிந்து கொள்வதன்மூலம், இறையச்சம் கொண்டவனாக மாறமுடியும்.
இதுபோலவே, இறையச்சம் என்ற பண்பு படைத்தவன் மற்றப் பண்புகள் அனைத்துக்கும் மேலாக அதனை வளர்த்துக் கொள்வதன் மூலம், தொழுகையின் உயிர்த் துடிப்புக்குத் தடை போட்டுவிட முடியும். அவன் மனத்தில் நிரம்பி நிற்கிற அச்சம் தொழுகையில் அவன் செய்கிற செயல்களையும் சொல்கிற வார்த்தைகளையும் உருமாற்றி வைத்துவிடும். ஒருமித்த மனப்பண்பையும் அதிலிருந்து தோன்றுகிற தெளிவையும் நிலை குலையச் செய்துவிடும்.
‘நீ செய்திருக்கிற-செய்து கொண்டிருக்கிற தவறுகள் கொடியவை. அவற்றிற்கு நிச்சயமாகத் தண்டனை உண்டு. இறைவனை உன்னால் ஏமாற்ற முடியாது’ என்று அடிமனம் அலறிக்கொண்டிருக்கும்போது, தான் மேற்கொண்டிருக்கும் தொழுகையை அவனால் முறைப்படி நிறைவேற்ற முடியாது.
எனவே தான், ‘தொழுகைக்குத் தேவையான பண்புகளில் இறையாதரவும் ஒன்று’ எனக் கூறுகிறேன்.


