IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 05

Readhere: Irai Vannakam – EP 01 – Part 02. Irai Vannakam – EP 01 – Part 03 Irai vannakam – EP 01 – Part 04
இறைவணக்கம்ஐந்தாம்பகுதிக்குஉங்களைஅன்புடன்வரவேட்கிறோம்.
கவனம் என்றால் என்ன?
ஒரு கவனம் என்பது வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டிய மனப்பண்புகளில் ஒன்று. நீங்கள் மேற் கொண்டிருக்கும் காரியத்தில் உங்கள் மனம் திரண்டு நின்றால் அதைத் தவிர்த்து வேறு எதிலும் உங்கள் எண்ணம் சிதறி ஓடவில்லையென்றால், உங்களுக்கு இந்த மனப் பண்பு இருக்கிறது என்பது பொருள். மனிதனிடம் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, உங்களைக் கடந்து செல்லும் ஒருவன் என்ன உடை அணிந்திருக்கிறான் என்ற சிந்தனை குறுக்கே நுழைந்து விட்டால் நீங்கள் சிதறிய மனம் படைத்தவர் என்று அர்த்தம். இது,கவனம் என்றும் ஒருமித்த மனநிலை என்றும் சொல்லப்படுகிற பண்புக்கு நேர் எதிரானது.
வலப்பக்கம் நீங்கள் ஒருமித்த கவனத்துடன் எந்த வேலையைச் செய்தாலும், அதற்கு மாறான எதையும் உங்களால் கவனிக்க முடியாது. இப்படிப்பட்ட மனநிலையில் நீங்கள் தொழுகையை மேற்கொண்டால், உங்களுக்கு தொழுகிறவரையும் இடப்பக்கம் திருக்குர்ஆன் ஓதுகிறவரையும் தெரிந்து கொள்ளும் சக்தி உங்களுக்கு இருக்காது. இப்படித்தொழுகிறவர்கள், அங்கு கிடைக்கும் இன்பத்தை விளக்கிக் கூறுவதற்குப் பொருத்தமான வார்த்தைகளைக் காலமெல்லாம் தேடிக் கொண் டிருக்கிறார்கள்.
அன்னை ஆயிஷா நாயகியிடமிருந்து நமக்குக் கிடைத் திருக்கும் செய்தியொன்று, தொழுகையின்போது நீங்களும் நானும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறது.
“பெருமானார் எங்களிடம் பேசிக் கொண்டிருப்பார்கள்; நாங்கள் அவர்களிடம் பேசிக் கொண்டிருப்போம். தொழுகையின் நேரம் வந்துவிட்டால், நாங்கள் எதிரில் இருப்பதைப் தெரிந்து கொள்ளாதவர்களைப்போல் செயல்படுவார்கள்.”
தொழுகையைத் துவக்குவதற்கு முன்னரே பெருமானாருக்கு ஒருமித்த மனநிலை ஏற்பட்டுவிடுகிறது என்பது இங்கு தெளிவாகிறது. அப்படியானால், அவர்கள் தொழுகையை எவ்வாறு நிறைவேற்றியிருப்பார்கள் என்பது சிந்தனையின் வெளிச்சத்தில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
பள்ளிவாசலின் தூண்களில் ஒன்று சாய்ந்து தரையில் விழுந்ததையும் அதைச் சுற்றிப் பலர் கூடி நின்றதையும் அங்கே தொழுதுகொண்டிருந்த முஸ்லிம் பின் யஸார் உணர்ந்து கொள்ளவில்லை என்று வரலாற்று ஏடுகளில் ஒன்று கூறுகிறது.
ஆழ்ந்த கவனத்துடன்- சிறிதும் சிதறாத் சிந்தனையுடன் தொழுகிறவர்களுக்கு, தம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் சக்தி கிடையாது என்பதற்கு இது ஓர் ஆதாரம் மட்டுமல்ல, ‘இறைவனை எப்படி நெருங்க வேண்டும்?’ என்று ஆர்வத்துடன் கேட்கிறவர்களுக்கு இது ஓர் அறிவுரையு மாகும். ‘ஆழ்ந்த கவனம் என்றால் என்ன?’ என்ற வினர்வுக்கு இதை ஒரு விடையாக வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? நான் உங்கள் விருப்பத்துக்கு குறுக்கீடாக நிற்கவில்லை!
எடுத்த காரியத்தில் முழுக் கவனம் வைத்து மற்ற அனைத்தையும் அடியோடு மறக்கும் மனப்பண்பு, ஏற்கெனவே நான் குறிப்பிட்டதுபோல் மக்களில் ஒரு சிலருக்குத் தான் உண்டு. ‘ஒரு சிலர்’ என்று சொல்வதைவிட ‘மிகச்சிலர்’ என்று கூறினால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.
உங்களைச் சுற்றி வாழ்கிற மனிதர்களையும் அவர்களின் செயல்களிலிருந்து தெளிவாகிற எண்ணங் களையும் கவனித்துப் பாருங்கள். அவர்களின் சொல்லுக்கும் செயலுக்குமுள்ள முரண்பாட்டையும், குறிக்கோளுக்கும் அதற்கான முயற்சிக்கும் நடுவில் பேயாட்டம் போடுகிற பலவீனத்தையும் கூர்ந்து ஆராயுங்கள். நூற்றில் பத்துப் பேருக்குக் கூட ஒருமித்த மனநிலை – சிதறாத சிந்தனை எனும் மனப்பண்பு கிடையாது என்ற தீர்க்கமான முடிவுக்கு நீங்கள் வந்து விடுவீர்கள்.
உடலுக்கு நோய் வருவது இயற்கையானது என்று சொல்வதுண்டு. நீங்களே இப்படிப் பலமுறை கூறியிருக்கிறீர்கள். ஆனால் உடலுக்கு மட்டும்தான் இது இயற்கை என்று வரம்பு கட்டுவது சாத்தியமல்ல. இந்த இயற்கையிலிருந்து உள்ளத்துக்கு விதிவிலக்கு அளித்தது யார்? உடல் மட்டுமன்றி உள்ளமும் நோயினால் பாதிக்கப்படுகிறது என்பதை யார் மறுக்கமுடியும்? உடலில் தோன்றும் வியாதிக்கும் மனதில் துளிர்க்கும் வியாதிக்கும் பாரதூரமான வித்தியாசம் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் உடலும் உள்ளமும் நோயினால் பாதிக்கப்படுகின்றன என்பதை உங்களால் மறுக்க முடியாது.



