IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 09

இறையாதரவு எனும் இந்தப் பண்பு, நீங்கள் செய்த தவறுகளினால் தோன்றிய குற்ற மனப்பான்மைக்குப் பரிகாரம் செய்யும்.
இறையாதரவும் உங்கள் இறையச்சத்துடன் தொழுகையில் கலந்து நின்றால், உங்கள் தொழுகை அச்சமும் ஆதரவும் பிணைந்து நல்லதொரு தொகுப்பாக அமைந்துவிடும்.

அங்கே இறையச்சத்தினால் ‘எந்தச் செயலுக்கும் விளைவு உண்டு; எந்த குற்றத்திற்கும் தண்டனை உண்டு’ என்ற நம்பிக்கை பிறக்கிற அதே நேரத்தில், இறையாதரவினால் ‘என் தவறுகளைவிட இறைவனின் அன்பு மிகப் பெரியது; அவன் கோபத்தைவிட அவன் கருணை மிக விரிவானது’ என்ற தெளிவு மன அமைதிக்குப் பாதுகாப்புக் கொடுக்கும்.
எனவே நீங்கள் தொழுகையில் ஈடுபடும்போது உங்கள் உள்ளத்தில் இறையச்சம் மட்டுமன்றி இறையாதரவும் இருக்க வேண்டும். இறையச்சம் மட்டும் தனித்து நின்றால் – அல்லது இறையாதரவு மட்டிலும் பிரிந்து நின்றால் உங்கள் தொழுகை ஒழுங்கான எண்ணமும் முறையான செயலும் கொண்ட தொகுப்பாக இருக்காது.
என்னுடைய இந்தக் கருத்து, மேலே இடம்பெற்ற ஞானி சுஃப்யான் சவரியின் கருத்துக்கு முரண்பட்டதல்ல,
ஒரு மனிதனின் தொழுகையில் பயபக்தி இல்லை என்றால், அவன் தொழுகை வீணாகிவிட்டது’ எனும் அவரது போதனை. ஒரு மனிதன் தொழும்போது இறைவனைப் பற்றிய அச்சம் அவன் மனதில் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறதே தவிர-
அவன் உள்ளத்தில் இறையச்சம் ஒன்றைத் தவிர்த்து வேறு எந்தப் பண்பும் இருக்கக் கூடாது என்றோ, பயபக்தி மட்டிலும் இருந்தால் போதுமானது – தொழுகை நிறைவேறி விடும் என்றோ அவரது போதனை பொருள் கொடுக்காது.
இறையச்சம் என்பது மிகச் சிறப்பானதொரு பண்பு. என்பது முற்றிலும் உண்மை, இறையாதரவு எனும் பண்புக் கும் சிறப்பான இடம் ஒன்று உண்டு என்பது உண்மைக்குப் புறம்பானதல்ல.
இறைவணக்கத்தில் இறையச்சத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கிற அதே முக்கியத்துவம் இறையாதரவுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எந்தக் காரியத்திலும், அது எந்தத் துறையைச் சேர்ந்த தாக இருந்தாலும், இஸ்லாம் நடுநிலையான பாதையையே தேர்ந்தெடுக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.
இறையச்சம் தனியே வளர்ந்து வலிமைபெற்றால், அங்கே நடுக்கமும் திகைப்பும் தொழுகையின் அமைப்பைக் குலைக்கும்; தொழுகையில் இருக்க வேண்டிய மற்றப் பண்புகளை அடித்துத் துரத்தும்; ‘நான் செய்த தவறுகள் மலையென குவிந்து கிடக்கும்போது, இரண்டு அல்லது நான்கு ரக அத் தொழுவதால் என்ன பயன் கிடைத்துவிடப்போகிறது. “விரைவாக விசாரணை செய்பவன்” என்றும் “கடினமாகத் தண்டிப்பவன்’

என்றும் இறைவன் தன்னைப் பற்றிக் கூறுகிறான். குற்றம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டவன் போன்று வாழ்ந்து கொண்டிருக்கிற எனக்கு அந்தப் பேரரசனின் சன்னிதானத்தில் நிற்கும் அருகதை இல்லை” என்ற அடிமனத்து எண்ண ஓட்டம் தொழுகையின்போது இருக்க வேண்டிய மன அமைதியைக் கொலை செய்யும். இதனால் விரக்தியும் தாழ்வு மனப்பான்மையும் விரைந்து வந்து நுழைவதற்கான வாசலின் கதவுகள் தாமாகவே விரியத் திறந்து கொள்ளும்.
இப்படிப்பட்ட அச்சம் தொழுகையில் இருக்க வேண்டிய அமைதியை அடியோடு அழித்துவிட்டு அதன் இடத்தில் பரபரப்பையும் அவநம்பிக்கையும் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து உட்கார வைத்துவிடும்.
பண்பாக இங்கே பெரிதும் பாரட்டப்படுகிற உயர்ந்த பண்பு ஒன்று வரையறைக்குமேல் வளர்ந்துவிட்டதால், தொழுகையின் நோக்கத்தை கெடுக்கிற உருமாறுகிறது. இப்படிப்பட்ட அச்சம் இறைவணக்கத்துக்கு மட்டுமின்றி இல்லற வாழ்க்கைக்கும் நன்மை தராதது. இது மற்றப் பண்புசுளை அடியோடு மறந்துவிட்டு இறையச்சத்தை மட்டும் மிக வலிமையான நிலைக்கு வளர்த்துக் கொள்வதால் – அல்லது வளரவிடுவதால் தோன்றும் விளைவு.
இறையச்சம் இல்லாமல் இறையாதரவு எனும் பண்பை மட்டும் நீங்கள் வளர்த்துக் கொண்டால், அங்கே தோன்றும் விளைவு நேர் எதிரானது – அச்சமும் ஆதரவும் ஒன்றுக்கொன்று எதிராக நிற்பதுபோல்!
வலிமையும் அதிகாரமும் கொண்ட அரசனுக்கு எதிரில் நிற்கும் குற்றவாளி அச்சத்தினாலும் என்ன நடக்குமோ என்ற குழப்பத்தினாலும் நிலைகுலைந்து போகிறான். மனத்துக்கும் செயலுக்குமுள்ள ஒற்றுமையை அவன் அச்சம் அலங்கோலப்படுத்துகிறது. அவனுடைய செயல்கள் அனைத்திலும் மட்டுமல்லாமல், எண்ணத் திலும் பேச்சிலும்கூட நடுக்கம் நடனமாடுகிறது.
ஒரு வேலை செய்யமுற்பட்டால் அதற்குச் சிறிதும் பொருத்தமில்லாத வகையில் அவன் உறுப்புகள் அசைகின்றன. ஏதோ ஒன்றைச் சொல்ல முயன்றால், கொஞ்சமும் சம்பந்தமில்லாத வார்த்தைகள் அவன் நாவிலிருந்து வெளிப்படுகின்றன. அச்சத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் அவன் எடுத்துக் கொடுக்க வேண்டிய பாத்திரத்தை உடைத்து நொறுக்குகிறான்; பணிவுடன் சொல்ல வேண்டிய செய்திகளைப் பொருளற்ற ஓசையாக்குகிறான். இதனால் அரச சபையை அவமதித்த குற்றம் அவன்மீது சுமத்தப்படுகிற நிலைமை ஏற்படுகிறது.
இந்த நிலைமை, இறை வணக்கத்தை மேற்கொள்கிற எந்த மனிதனுக்கும் சிறப்புச் சேர்ப்பதல்ல!


