IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 09

முன்னவன் அச்சத்தினால் உந்தித் தள்ளப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்றால், பின்னவன் அடி மனத்தில் ஆழ்ந்து நிற்கிற ஆதரவு எனும் பண்பின் தூண்டுதலால் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.
இதனால்தான், ‘குழந்தைகள் அன்பு கலந்த கண்டிப்புடன் வளர்க்கப்பட வேண்டும்’ என்று இஸ்லாம் தீர்ப்பு வழங்குகிறது.
இந்தத் தீர்ப்பு, குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் எனும் பிரச்சினைக்குத் தான் சொந்தமானது என்று நினைப்பது தவறு. தொழுகையின மூலம் தம்மை வளர்த்துக் கொள்ள நினைக்கிறவர்களுக்கும் இந்தத் தீர்ப்பு நிச்சயமாகப் பொருந்தும்.
இறையாதரவு இல்லாமல் இறையச்சம் மட்டுமே நிரம்பி நிற்கும் வகையில் நிறைவேற்றப்படுகிற தொழுகை எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டோம். நடுப்பாதைக்கு மாறாக, இப்படிபட்ட இறையச்சம் தொழுகையில் தோன்றுகிற மற்றப் பண்புகளை அழித்துவிடும் என்பது மட்டுமல்ல, தொழுகையின் வெளிச்செயல்களிலும் அது பரபரப்பைத் தோற்றுவித்து விடும் என்பதையும் உணர்ந்து கொண்டோம். இறையச்சம் பாராட்டுக்குரிய பண்பானாலும் இறையாதரவு இல்லை என்றால் அது மனிதனின் எண்ணத்தையும் செயலையும் நிலைகுலையச் செய்துவிடும் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொண்டோம்.
இப்போது, இறையச்சம் சிறிதும் இல்லாமல் இறையாதரவு மட்டும் பரவி நின்றால் விளைவு எப்படி இருக்கும் என்பதை நாம் ஆராய வேண்டும்.
சற்று முன்னர் நான் எடுத்துக் காட்டியதுபோல், இறையச்சமும் இறையாதரவும் முக்கியத்துவத்தில் ஒன்றுக்கு ஒன்று தாழ்ந்ததுமல்ல; ஒன்றைவிட மற்றொன்று உயர்ந்தது மல்ல. எனினும் இறை வணக்கத்தில் ஒன்றை மட்டும் பிரித்து எடுத்தால் மற்றொன்று தனித்து நின்று நற்பயனை உருவாக்காது.

இறையச்சம் அறவே இல்லாமல் இறையாதரவு ஒன்றை மட்டும் துணை கொண்டு ஒரு மனிதன் தன் மீது விதிக்கப்பட்ட தொழுகையை நிறைவேற்ற முற்படுகிறான என்று வைத்துக் கொண்டால், அந்த மனிதனை அடுத்த வீட்டுக் கதவில் கல்லெறிந்துவிட்டுச் சிரித்துக் கொண்டே தாயின் மடியில் உட்கார்கிற சிறுவனுக்கு
ஒப்பிடலாம். தன் தவற்றை அவன் உணர்ந்தாலும், அன்னையின் அன்பு அரவணைப்புக் கொடுக்கும் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும் ;
அவன் இறைவனை மனத்தில் கொண்டு தொழுகையை மேற்கொள்ளும்போது, அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய கொடையாளனின் கருணை எவ்வளவு விரிவானது என்று அவனுக்குத் தெரிகிறது. ‘மனிதன் செய்யும் தவறுகள் மலைபோல் குவிந்து கிடந்தாலும், மன்னிக்கும் மாமன்னனின் கருணை கடலைவிடப் பெரியது’ என்ற நம்பிக்கை அவனுக்குத் தோன்றுகிறது. ‘நான் செய்த தவறுகளை மட்டுமன்றி, நான் செய்யப் போகிற குற்றங்களையும் மன்னித்துத் தன் பெருங்கருணையை என்மீது பொழிவது அவனுக்குச் சிரமமான காரியமல்ல!’ என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த எண்ணம் ‘எந்தப் பாவத்தைச் செய்தாலும் இறைவனிடம் அதற்கு நிச்சயமாக மன்னிப்புக் கிடைக்கும்’ என்ற துணிச்சலையும் ‘என்னைப் பெற்று வளர்த்தவர்களை விடப் பன்மடங்கு அன்புள்ள அவன், பலவீனத்தினால் நான் செய்த தவறுகளைக் கணக்கிட்டு வைத்து என்னைத் தண்டிக்கப் போவதில்லை!’ என்ற தீர்மானத்தையும் தோற்றுவிக்கிறது.
இறையாதரவு எனும் பண்பை மட்டும் மிக உயர்ந்த நிலைக்கு வளர்த்துக் கொண்ட அவன் எண்ணம் இப்படி ஓடுகிறது.


