IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 09

இந்த உண்மையை இன்னும் தெளிவாக உணர்ந்து கொள்ள விரும்பினால், கண்டிப்பும் அதிகாரமும் நிறைந்த பெற்றோரினால் உறவினரினால் வளர்க்கப்படுகிற குழந்தைகளைப் பாருங்கள். தம் பெற்றோரிடமிருந்து உறவினரிடமிருந்து கோபத்தையும் தண்டனையையும் மட்டுமே பெற்றுவந்த குழந்தைகள் வளர்ந்து வாழ்க்கையில் நுழையும்போது எதிர்ப்படும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் துணிவு இல்லாமல் வாணாளை வீணாளாக்குவதை நீங்கள் பார்க்கலாம். அவர்களுக்கு பயந்து நடுங்கத்தான் தெரியுமே தவிர, சிரித்து மகிழத் தெரியாது.

தொழுகையை முறைப்படி நிறைவேற்றிக் கொண்டிருக்கும் மனிதன் இந்த நிலைமைக்கு வருகிறான் என்றால், மிகப் பெரும் பயன்தரக் கூடிய ஒன்றை அவன் “மிகப் பெரும் பயங்கர விளைவைத் தோற்றுவிக்கிற கருவியாக மாற்றிவிட்டான்” என்று துணிந்து கூறலாம்.

எனவே இங்கு நாம் இறையாதரவு எவ்வளவு தேவை யானது என்பதை உணர்கிறோம். இந்தப் பண்பை வலியுறுத்திக் கூறுவதன் மூலம் இஸ்லாம் தேர்ந்தெடுக்கிற நடுப்பாதையை உங்கள் நினைவுக்குக் கொண்டு வருகிறேன்.

ஆனால், இந்தப் பண்பு இறையச்சத்தின் துணையின்றித் தனித்து நின்றால் அங்கு நடுப்பாதை உண்டாகாது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஒரு மனிதனின் தொழுகையில் இறையாதரவு மட்டும் முழு வலிமையுடன் தனித்து நின்றால் அங்கே இறையச்சத்துக்கு அறவே இடமில்லை என்றால் அவன் தொழுகையில் அலட்சியம் எனும் மனப்பான்மை தனக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை நிருபித்துக் காட்டும்-சிறிதும் கண்டிப்பு இல்லாமல் முழுமையான அன்புடன் வளர்க்கப்படும் குழந்தைகள் தம் பெற்றோரின் கருத்துக்களை அலட்சியம் செய்வதுபோல்!

இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் பின்னர் வாழ்க்கையில் பொறுப்புள்ள வேலைகளைச் செய்ய முற்படும்போது அங்கே குறைபாடு நிறைந்த செயலையும் கட்டுப்பாடற்ற’ எண்ணத்தையும் நீங்கள் நிச்சயமாகப் பார்க்க முடியும், எந்தக் குற்றத்தையும், அதன் விளைவைச் சிறிதும் உணராமல் சுதந்தர மனப்பான்மையோடு அவர்கள் செய்வதை நீங்கள் காணலாம். ஏனெனில் அவர்கள் பிறந்ததிலிருந்து சுதந்தரத்தையும் அன்பையும் தான் அனுபவித்து வந்திருக்கிறார்களே தவிர, கண்டிப்புக்கும் தண்டனைக்கும் அவர்களின் வளர்ச்சியில் கொஞ்சமும் இடம் கொடுக்கப்படவில்லை.

இதனால் சிறிதும் அன்பே இல்லாமல் முழுக கண்டிப்புடன் வளர்க்கப்பபடுகிற குழந்தையும், கொஞ்சமும் கண்டிப்பு இல்லாமல் முழுச் சலுகையுடன் வளர்க்கப்படும் குழந்தையும் வாழ்க்கையில் ஒரே நிலையில்தான் இருக்கின்றன எனும் உண்மை, தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் சிந்தித்துப் பார்க்கிறவர்களுக்கு புலப்படாத ஒன்றல்ல. இந்தக் குழந்தைகள் இரண்டும் வளர்ந்து பெரியவர்களாகும்போது, அவர்கள் முழுமையான உடல் வளர்ச்சியை பெற்றிருந்தாலும், அவர்களிடம் மன வளர்ச்சி எனும் சிறப்பு போதிய அளவுக்கு கிடையாது என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம்.

‘போதுமான அளவுக்கு மனவளர்ச்சி பெறாதவர்கள்’ என்று இந்த இரண்டு பேரையும் குறிப்பிடலாம் என்றாலும் முன்னவனின் செயலுக்கும் பின்னவனின் செயலுக்கும் பாரதூரமான வேறுபாடு இருக்கும்.

முன்னவன் நல்ல காரியத்தைச் செய்யும்போது கூட அச்சத்தினால் நடுங்கிக் கொண்டிருக்கிற அதே நேரத்தில், பின்னவன் மிகப் பெரும் கெட்ட செயலைச் சிறிதும் சங்கடமோ குழப்பமோ இல்லாமல் சிரித்துக் கொண்டே செய்து வருவதை நீங்கள் பார்க்கலாம்.