IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 05

ஞானத்தின் கூற்று
காடுகளிலும் மலைகளிலும் வாசம் செய்த அவர்கள் காணும் பொருள்களில் எல்லாம் கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரும் சக்தியொன்று கலந்து நிற்பதை உணர்ந்தார்கள். தாம் பெற்ற இன்பத்தைத் தரணி முழுவதும் பரப்பும் எண்ணத்தில் அவர்கள் எழுதிய நூல்கள் எண்ணற்றவை. விளக்குவதற்கு பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காத காரணத்தால் அவர்கள் வரைந்து காட்டிய உவமானங்கள் கணக்கற்றவை. மனிதனையும் மிருகத்தையும் பிரித்துக் காட்டுகிற மனப் பண்புகளை வளர்த்துக்கொள்வதற்கென்று அவர்கள் வகுத்துக் கொடுத்த சட்டங்கள் எல்லைக் கோட்டுக்கு அப்பாற்பட்டவை.
மனம் என்றால் என்ன என்ற வினாவுக்கு அவர்கள் கொடுத்த விளக்கம் என்றைக்கும் மறக்க முடியாதது. எண்ணம் என்றால் எதைக் குறிக்கும் என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் எல்லோருக்கும் வழிகாட்டும் சக்தி படைத்தது. நல்லவன் நல்லவனாகவும் கெட்டவன் கெட்டவனாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன என்ற விசாரணைக்கு அவர்கள் கொடுத்த விரிவுரை நீங்களும் நானும் படித்துப் பயன்பெறத் தகுந்தது.

ஒரு மனிதன் இறைவனை எப்படி வணங்க வேண்டும் எனும் வினாவுக்கு அவர்கள் தந்த விளக்கம் சட்டத்தின் வட்டத்துக்கு அப்பாற்பட்டது; ஆனால் சட்டத்துக்கு முரண்பட்டதல்ல.
தொழுகையின்போது ஒரு மனிதனின் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு அவர்கள் கொடுத்த தெளிவுரை, தொழுகையினால் ஒரு மனிதன் முழுப் பயன் அடைய வேண்டும் எனும் நல்லெண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது. அது சட்ட மேதைகளின் கருத்துக்கு நோக்கத்துக்கு எந்த வகையிலும் எதிரானதல்ல.
தொழுகையின்போது ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய மனநிலைக்கு அவர்கள் பெரிதும் முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பது உண்மை. என்றாலும் தொழுகைக்கு வெளிச்செயல்கள் தேவை யில்லை என்று அவர்கள் ஒருபோதும் கூறியது கிடையாது. மாறாக, வெளிச் செயல்கள் எப்படி நிறைவேற்றப் படவேண்டும் என்று விளக்கமும் கொடுத்தார்கள்.



