IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 05 ‪

நோயாளியும் ஏமாளியும்

உடலின் நோயைவிட மனத்தின் வியாதி மிகக் கொடியது என்பது என் கருத்து. காரணம், முன்னதை மருந்து கொடுத்துக் குணப்படுத்துவது சுலபமான காரியம். ஆனால் பின்னதை அவ்வளவு சுலபமாக குணப்படுத்த முடியாது. ஏனெனில், நோய் கொண்ட மனத்தைப் பெற்றவர்கள், எத்தனை பேர் எடுத்துக்காட்டினாலும், தம் உள்ளம் நோயுற்றிருக்கிறது என்பதையே உணர்வதில்லை!

உடலில் தோன்றும் வியாதி ஒரு மனிதனுக்கு ‘நோயாளி” என்ற பெயரை கொடுக்கலாம் ‘ஏமாளி’ எனும் பட்டத்தை தேடித்தர முடியாது. ஆனால் உள்ளத்தில் தோன்றும் வியாதி ஒரு மனிதனுக்கு ‘ஏமாளி’ எனும் பட்டத்தை மட்டுமன்றி, ‘குற்றவாளி’ என்ற நிலையையும் ஏற்படுத்திவிடும். அவன் தன்னிடம் புதைந்து கிடக்கும் உண்மைகளைத் தெரிந்து கொள்ளாததால் தான் மேற் கொள்ளும் காரியத்தில் ஏமாந்து போகிறான். தன் கடமையை முறைப்படி நிறைவேற்றாத காரணத்தால் அவன் குற்றவாளியாகிறான்.

மனிதரில் பெரும்பாலோர் தம்மைத் தாமே உற்றுப் பார்த்துப் பக்குவ நிலைக்கு வருகிற சக்தி இல்லாத காரணத்தால், பலதரப்பட்ட மனநோய்களுக்கு அடிமைப் பட்டுத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் – அல்லது வாழ்வதாக நினைத்துக் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு இந்த நிலைமை ஏற்படக் காரணம் என்ன? பிறப்பிலிருந்தே அவர்களின் கோளாறு தொடர்ந்து வருகிறதா? தம் பெற்றோரிடமிருந்து அவர்கள் பெற்றுக் கொண்ட பரம்பரைச் சொத்து என்று இதனைக் குறிப்பிட முடியுமா? இத்தகைய மனக் கோளாறுகள் தாமாகவே தோன்றியவையா? இல்லை என்றால், அவர்கள் தமக்குத் தாமாகவே வேண்டுமென்றே அவற்றைத் தோற்றுவித்துக் கொண்டார்களா? அவற்றை அழிப்பதற்கும் அவற்றின் இடத்தில உயர்ந்த பண்புகளைத் தோற்றுவித்துக் கொள்வதற்கும் ஏதேனும் பாதை உண்டா?

இங்கே இப்படிப் பல்வேறு வினாக்கள் தோன்றலாம்.

மனிதனிடம் காணப்படுகிற பண்புகள் அனைத் துக்கும், அவை நல்லவையாக இருந்தாலும் கெட்டவையாக இருந்தாலும், மனமே பிறப்பிடம். மனம் என்பது ஏற்கெனவே பலமுறை நான் குறிப்பிட்டதுபோல் மிகப் பெரும் ஆழ்கடல் போன்றது. ஒரு மனிதனின் முன்னேற்றத் திற்கும் பின்னேற்றத்திற்கும் அவன் மனத்தில் ஆழ்ந்து நிற்கும் பண்புகளே அடிப்படைக் காரணங்கள். ஒரு மனிதனின் வெற்றிக்கும் தோல்விக்கும் அவன் மனத்தின் அடித்தளத்தில் மறைந்து நின்று வெளியுறுப்புகளை இயக்குகிற எண்ணமே மூலக் காரணம் என்பதைப் பெருமானாரின் வாக்கு ஒன்று சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது.

“எல்லாச் செயல்களும் எண்ணங்களைப் பொருத் தவை. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியதுதான் கிடைக்கும்.”

பிறிதோரிடத்தில் அவர்கள் இப்படிக் கூறியிருக்கிறார்கள்:

“மனித உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது ஒழுங்குபட்டால் உடல் முழுவதும் ஒழுங்குபடும். அது நிலை குலைந்தால் உடல் முழுவதும் நிலைகுலையும்…”

இங்கு சதைத் துண்டு எனக் குறிக்கப்படுவது, உடல் முழுவதற்கும் இரத்தத்தை அனுப்புகிற இதயம் எனும் உள்ளுறுப்பு அல்ல. அது மனிதனுக்கு மட்டுமல்ல, மிருகத் துக்கும் உண்டு. உயிரற்றுப் போன பிரேதத்திலும் அது இருக்கிறது.

எல்லா நன்மைகளுக்கும் அனைத்து தீமைகளுக்கும் பிறப்பிடமான மனித மனமே இங்கு குறிப்பிடப்படுகிறது. மனம் என்பது இதயம் என்ற உறுப்பல்ல, எனினும், இலையில் பசுமை கலந்து நிற்பதுபோல் – நீரில் பள்ளம் நோக்கி ஓடும் குணம் பிணைந்து கிடப்பதுபோல், இந்த உறுப்பில் மனம் இணைந்து நிற்கிறது.

இதனால்தான், ஆத்மிக இன்பத்தை – எழுத்தில் சித்திரிக்க முடியாத பேரின்பத்தைக் குறிக்கோளாகக் கொண்ட ஞானிகள் அனைத்துக்கும் மேலாக மனப்பயிற் சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

மனம் என்றால் என்ன? அதில் வினாடிக்குப் பத்து எனும் அடிப்படையில் தோன்றி மறையும் எண்ணங்கள் யாவை? உள்ளத்தின் அடித்தளத்தில் ஒளிந்து நின்று செயல்களை இயக்குவதன் மூலம் ஒரு மனிதனை நேரான வழியிலோ முரணான பாதையிலோ உந்தித்தள்ளும் எண்ணங்கள் எத்தனை? மிருகத்தைவிட அப்படி யொன்றும் உயர்ந்துவிடவில்லை என்று சொல்லத் தகுந்த வகையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் எப்படிப்பட்ட எண்ணங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்? 

அவர்கள் இப்படிப்பட்ட நிலையிலிருந்து தம்மைத் தாமே உயர்த்திக் கொண்டு, இறைத் தூதர்களுக்கு அடுத்த வீட்டார் என்று கூறத் தகுந்தமுறையில் தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாதா? பயிற்சியினால் காட்டுமிருகத்தை வீட்டுத்தோழனாக அல்லது தோழியாக மாற்றுவது சாத்தியம் என்றால், முறையான பயிற்சியின் மூலம் கெட்ட பண்புகளை நல்ல பண்புகளாக ஏன் திருப்ப முடியாது? இறைவனின் பிரதிநிதி என்று சொல்லப்படுகிற மனிதனுக்கு இது அசாத்தியமானதா?

இப்படிப்பட்ட ஆயிரமாயிரம் வினாக்களுக்கு விளக்கம் தேடும் வழியில் அவர்கள் செய்த சாதனைகளை இன்றைக்கும் நீங்கள் வரலாற்றின் பொன்னேடுகளில் பார்க்கலாம். இரவு பகல் என்ற வேற்றுமையை மறந்துவிட்டு ஞானத்துக்காகத் தம் வாணாளை எல்லாம் அர்ப்பணித்த அவர்கள், படித்தவர்களுக்காகவும் பாமரர்களுக்காகவும் கொட்டிக் குவித்து வைத்த ஆணி முத்துக்களை இப்போதும் நீங்கள் ஆத்மிக நூல்களில் காணலாம்.