IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 05

தொழுகையும், ஞானமும்
தொழுகையைப் பொறுத்தவரை, அவர்களின் ஒருமித்த ஒப்புதலைப் பெற்ற கருத்து இதுதான்: தொழுகையை மேற்கொள்ளும் மனிதன் ஆத்மிக வளர்ச்சிக்கு மிகத்தேவையான காரியம் ஒன்றைச் செய்ய முற்படுகிறான். தான் செய்யும் வேலைக்குக் தொழுகை என்ற பெயர் கிடைத்துவிட்டால் போதுமானது என்ற எண்ணம் அவனுக்கு அறவே வரக்கூடாது. தொழுகை யினால் கிடைக்கவிருக்கிற எல்லாப் பண்புகளையும் தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அசைக்க முடியாத தீர்மானம் அவனுக்கு இருக்கவேண்டும். தொழுகையின் வெளிச்செயல்களை முறைப்படி நிறைவேற்றிவிட்டால் கடமை தீர்ந்தது என்று அவன் நினைக்கக் கூடாது. ‘அப்போது இருக்கவேண்டிய மனப்பண்புகள் அனைத் தையும் வளர்த்துக்கொள்ள அவன் முயற்சி செய்ய வேண்டும். ‘இது ஞானிகளுக்குதான் சாத்தியம்; இந்த பண்புகளை வளர்த்துக் கொள்ளும் சக்தி உனக்கு கிடையாது!’ என்று தன் அடிமனம் கூறுவதை அவன் பொருட்படுத்தக்கூடாது. முறையான பயிற்சியை மேற்கொண்டால் தனக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று அவன் உறுதியாக நம்ப வேண்டும்…

இவ்வளவு நேரமாக என்னிடம் கேள்வி கேட்டு கொண்டிருந்த உங்களிடம் ஒரு கேள்வி – ஒரே ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் நன்கு யோசித்து, நெஞ்சைத் தொட்டுப் பார்த்துப் பதில் சொல்ல வேண்டும்.
இப்படிப்பட்ட தொழுகையை மேற்கொள்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
இதற்கு நீங்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தால் மேற் கொண்டு நான் எழுதவிருக்கும் செய்திகளைப் படியுங்கள். இதுவரை நீங்கள் காணாத இன்பத்தைச் சுவைக்கும் வாய்ப்பு உங்களுக்கு நிச்சயமாக உண்டு.
என் கேள்விக்கு நீங்கள் ‘இல்லை’ என்று விடை கொடுக்கிறீர்களா? அப்படியானால் இந்த நூலை மூடி வைத்துவிட்டு, எங்கேயாவது ஓரிடத்தில் நீட்டி நிமிர்ந்து படுத்துத் தூங்குங்கள். பின்பற்றும் எண்ணம் இல்லாமல் படிப்பதைவிட உலகத்து துன்பங்களை எல்லாம் மறந்து தூங்குவது மிகச்சிறந்த செயல். இங்கே நீங்கள் ஓர் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும்; சிரித்துக் கொண்டு தீமை செய்கிறவர்கள் அழுதுகொண்டு தண்டனை அனுபவிக்கிற நாள் ஒன்று நிச்சயமாக உண்டு!
கவனம் பற்றிய சிந்தனையை இப்போது நாம் தொடரப் போகிறோம். கவனம் என்றால் என்ன எனும் வினாவுக்குத் தெளிவாகப் பதில் கொடுத்துவிட்டேன். இது, தொழுகை முழுவதும் உயிரோட்டம் பரவி நிற்பதற்குத் தேவையான பண்புகளில் ஒன்று. இந்த பண்புகளை இழந்தவர்கள், தொழுகையில் கிடைக்கவிருக்கிற இன்பத்தை அனுபவிக்கும் வாய்ப்பை இழந்தவர்கள்.
ஆனால் மக்களில் பெரும்பாலோர் இந்த நிலைமை யில்தான் இருக்கிறார்கள். தொழுகையை வீணாக்குகிற எல்லாப் பண்புகளும் அவர்களிடம் இருக்கின்றன.
பழக்கமும் பரம்பரையும்
இந்தத் தீய பண்புகள் பெற்றோரிடமிருந்து பிறப்பி லேயே வந்துவிட்டன என்று கூறுவது சரியல்ல. பெற்றோரின் அச்சு, குழந்தைகள்மீது பதிகிறது என்பது உண்மை. ஆனால் ஒரு மனிதனின் குணங்கள் அத்தனையும் அவன் பெற்றோரிடமிருந்தே அவனுக்கு வந்திருக்கின்றன எனக் கூறுவது தவறு.
திக்குவாயனின் குழந்தை குறிப்பிட்ட வயதுக்கு வரும் போது பெற்றவனைப் போலவே திக்கித் திக்கிப் பேச ஆரம்பிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். பரபரத்த மனம் படைத்த பெற்றோரின் குமாரன் எதிலும் நிலை கொள்ளாமல் பரபரப்புடன் வாழ்வதைக் கண்டிருக் கிறோம். ‘மூளைக் கோளாறு இவனுக்கு மட்டும்தான் இருக்கிறதா? இவனைப் பெற்றவன் இன்னும் பைத்தியக்காரனாகத்தான் இருக்கிறான்’ என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.
இதை எல்லாம் பார்க்கும்போது, பெற்றோரின் குணம் பிள்ளைகளுக்குத் தாவிவருகிறது என்று தீர்மானிக்கத் தோன்றுகிறது. ஆனால் இது முற்றிலும் உண்மையல்ல.
இதோடு ஐந்தாம் பகுதி நிறைவு பெறுகிறது. நன்றி வஸ்ஸலாம்.



