Irai Vanakam | இறை வணக்கம் | S Abdul Wahab Baqavi – Episode 03 ‪

மனிதர்களில் ஒரு சாரார் ஞானக் கோட்டைக்குள் நுழைந்து விளையாடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் மறுசாரார் ஞானத்தின் முதல் எழுத்தைக் கூடத் தெரிந்து கொள்ளும் சக்தியில்லாமல் தரையில் கிடந்து தவழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எடுத்த காரியத்தில் லயித்து நின்று வெற்றியடைவது என்பது அவர்கள் இதுவரை அனுபவித்துப் பார்க்காத ஒன்று. கடைவீதியில் உட்கார்ந்து வியாபாரம் செய்து கொண்டிருக்கும் அவர்கள், மனைவி – மக்கள் என்ன செய்து கொண் டிருக்கிறார்கள் என்று விசாரணை நடத்துவதற்கு தம் மனத்தை அனுப்பி விடுகிறார்கள். 

பள்ளிக்குள் நுழைந்து பக்குவப்பட்டவர்களைப் போல் உட்கார்ந்திருக்கும் அவர்கள், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போன குழந்தையின் நினைவில் தம் எண்ணம் சுழன்று கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதில்லை!

எனவே, ‘சிறிதும் சிதறாத கவனத்துடன் தான் தொழுகை நிறைவேற்றபட வேண்டும் – இல்லையேல் அந்தத் தொழுகை முழுமை பெறாது’ என்று சட்டம் வகுப்பது சாத்தியமில்லை, ஏனெனில்

இப்படிச் சட்டம் இயற்றப்பட்டால் அது ஒரு நினைவுச் சின்னமாக ஏட்டில் நிற்குமே தவிர, நிச்சயமாக இயக்கத்துக்கு வராது. ஒரு சிலரைத் தவிர்த்து, மற்றவர்களால் அதனைப் பின்பற்ற முடியாது. மக்களில் பெரும்பாலோர் சிதறிய மனத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஆதாரம் காட்டி நிரூபிக்க வேண்டிய செய்தியல்ல. 

இந்தச் சட்டத்தை அவர்களால் பின்பற்ற முடியாது என்பது மட்டுமல்ல, சட்டப்படி தொழுகிற சக்தி தமக்குக் கிடையாது என்ற எண்ணத்தின் வலிமையினால் அவர்கள் தொழுகையை அடியோடு வெறுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை! 

மனிதனுக்கென்று வகுக்கப்படும் சட்டம் பெரும் பாலோர் செயல்படுத்தத் தகுந்ததாக இருக்கவேண்டும். ஒரு சிலருக்கு மட்டும் சட்டம் போடுவதில் அர்த்தமே கிடையாது. ஏனெனில் அவர்கள் சட்டத் தொகுப்பு உலகத்துக்கு கிடைப்பதற்கு முன்னரே சட்டப்படி வாழ்ந்திருக்கிறார்கள். சட்ட நூல்கள் வெளிவந்த பின்னர் சட்டத்தின் உட்பொருளை உணர்ந்து தம் கடமைகளை முறைப்படி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். 


இத்தகையவர்கள், சற்று முன்னர் நான் குறிப்பிட்டது போல், மிக அரிதானவர்கள், மக்கட்திரளில் இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனவே பெரும்பாலோரின் பலவீனத்தைத் தெரிந்துகொண்ட சட்ட நிபுணர்கள். ‘தொழுகையின் துவக்கத்தில் முழுக்கவனம் இருந்தால் போதுமானது’ என்று தீர்ப்பு வழங்கினார்கள். எந்தக் காரியத்திலும் அதைத் துவங்கும் நேரமே முக்கியமானது என்ற அடிப்படையில், தொழுகையின் துவக்கத்தில் முழுக் கவனத்தைக் கடமையாக்கினார்கள்: ஒரு வினாடியானாலும், ‘முழுக்கவனம் இருக்கிறது’ என்று சொல்லத் தகுந்த வகையில் ஒரு மனிதனின் தொழுகை அமைந்து விட்டால் போதும் என்பது சட்டத்தின் கண்ணோட்டம். இதற்குமேல் அதிகமாக வேறு எதையும் அது எதிர்பார்க்கவில்லை. 

இதோடு இரண்டாவது பகுதி நிறைவு பெறுகிறது.

இறை வணக்கம் அடுத்தமூன்றாவதுபகுதி “சட்டத்தின் எல்லைக்கு அப்பால்” அடுத்த பகுதியில் கேட்கலாம். நன்றி வஸ்ஸலாம். 

LISTEN ALL EPISODE BELOW: