Irai Vanakam | இறை வணக்கம் | S Abdul Wahab Baqavi – Episode 03

Chapter 02 – ஒரு சந்தேகம்
இறைவணக்கத்தின்போது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் இருக்கவேண்டிய மனப்பண்புகளைப் பற்றிய நம் சிந்தனையைத் தொடர்வதற்கிடையில், இந்த நூலைப் படிக்க ஆரம்பித்த நேரத்திலிருந்து உங்கள் மனத்தைத் துளைத்துக் கொண்டிருக்கிற சந்தேகத்துக்கு விளக்கம் கொடுத்துவிடுவது நல்லது என்று நினைக்கிறேன்.
நீங்கள் நீண்ட நேரமாக என்னிடம் கேட்பதற்குச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
“தொழுகையின்போது ஒரு மனிதனுக்கு முழுக் கவனம் இல்லையென்றால் அவன் தொழுகையைப் பயனற்ற ஒன்று எனக் குறிப்பிடுகிறீர்கள். அவன் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது என்று கூறுகிறீர்கள். இந்தக் கூற்று, சட்டமேதைகளின் ஒருமித்த கருத்துக்கு முற்றிலும் எதிரானது. தொழுகையின் துவக்கத்தில் முழுக்கவனம் இருக்க வேண்டும் என்றுதான் அவர்கள் சொல்கிறார்களே தவிர, தொழுகை முழுவதும் ஆழ்ந்த கவனம் இருக்கவேண்டும் என்று சட்டம் வகுக்கவில்லையே?”

இந்த இடத்துக்கு இந்தக் கேள்வி முற்றிலும் நியாய மானது. இதற்குரிய பதிலைப் புரிந்து கொள்வதற்கு முன்னர் மிக முக்கியமான உண்மை ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். என் கருத்துக்கு திருக்குர் ஆனிலிருந்தும் பெருமானாரின் வாக்கு களிலிருந்தும் ஆதாரங்கள் பலவற்றை எடுத்துக் காட்டியிருக்கிறேன். அவற்றை அடியோடு மறுக்கத் துணிவது அறிவைத் தேடுகிற உங்களுக்கு அழகல்ல.
மனிதனின் செயல்களுக்கு மட்டுமின்றி மனத்தின் எண்ணங்களுக்கும் இஸ்லாம் சட்டம் வகுத்து வைத்திருக்கிறது என்பது உங்களுக்குப் புரியாததல்ல. உடலையும் உடையையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று சட்டம் போட்ட இஸ்லாம் உள்ளத்தைத் தூய்மைப்படுத்து வதற்குரிய மார்க்கத்தையும் கற்றுக்கொடுத்திருக்கிறது. இம்மையின் உயர்வுக்குரிய காரியங்களை மட்டுமன்றி மறுமையின் வெற்றிக்குரிய செயல்களையும் அது விளக்குகிறது.
திருக்குர் ஆனிலிருந்து எடுக்கப்படுகிற ஓர் இறை வசனத்துக்கு ஒரே ஒரு பொருள்தான் உண்டு என்று யாரும் கூறமுடியாது. இறைவசனம் ஒன்றில் வெளிப்படையான பொருளும் அந்தரங்கமான – அடிப்படையான அர்த்தமும் மறைந்திருக்கின்றன. திருக்குர்ஆனில் மட்டுமல்லாமல் பெருமானாரின் வாக்குகளிலும் இந்த அமைப்பை நீங்கள் பார்க்கலாம். நபித்தோழர் அபூ ஹுரைராவின் கருத்து ஒன்று இங்கு குறிப்பிடத்தகுந்தது:



