Irai Vanakam | இறை வணக்கம் | S Abdul Wahab Baqavi – Episode 03

இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளும் உண்மை இதுதான்: சட்ட மேதைகள், தொழுகையில் ஆழ்ந்த கவனம் எவ்வளவு முக்கியமானது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார்கள்; கவனம் என்பது தொழுகைக்கு அடிப்படையானது என்பதையும் புரிந்து வைத்திருக்கிறார்கள்! இல்லையேல் அவர்கள், ‘அறவே கவனமில்லாமல், ஆழ்ந்த மறதியோடு தொழுகையை நிறைவேற்றலாம்’ என்று சட்டம் இயற்றியிருப்பார்கள்!
சட்டத்தின் நோக்கம் சட்ட மேதைகளின் நிலையையும் அவர்கள் வகுக்கும் சட்டத்தின் நோக்கத்தையும் நீங்கள் மிகத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். சட்டநிபுணர்கள் மனிதனின் ஆத்மிக வளர்ச்சியில் அக்கறை காட்டுவதில்லை; உள்ளத்தின் பண்புகளை வளர்ப்பதற்கு அவர்கள் சட்டம் வகுப்பதில்லை. வேறு என்னதான் அவர்கள் செய்கிறார்கள்?
அவர்கள் மிகவும் அடிப்படையான வேலையை மட்டும் செய்கிறார்கள். ஒரு மனிதனை ‘முஸ்லிம்’ என்று குறிப்பிடுவதற்குத் தேவையான வெளிப்படைச் சட்டங்களைத் தொகுத்து நூல் எழுதுகிறார்கள். பெரும்பான்மையாக இந்தச் சட்டங்கள் வெளியுறுப்புக்களைக் கட்டுப்படுத்துகின்றனவே தவிர, உள்ளத்துப் பண்புகளைத் தொட்டுப் பார்ப்பதில்லை.
இந்த சட்டங்களை ஒருவன் மதித்து நடந்தால் அவனுக்கு முஸ்லிம் என்ற பெயர் கிடைக்கிறது. அவன் குனிந்து நிமிர்ந்து, சிரத்தைத் தரையில் வைத்துச் செய்யும் வேலைத் தொகுப்புக்குத் தொழுகை என்ற பெயர் கிடைக்கிறது. இதனால் அவன் தொழாத குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறான்.
இப்படிப்பட்ட சட்டங்களை வகுத்துக் கொடுத் திருப்பதன் மூலம் அவர்கள் மிகப் பெரும் தவறு செய்திருக்கிறார்கள் என்றோ, ஆத்மிக அறிவுக்குத் திரைபோட்டிருக்கிறார்கள் என்றோ நீங்கள் குற்றம் சாட்டமுடியாது. ஏனெனில் அடிப்படையை அவர்கள் எடுத்துக் கூறினார்களே தவிர அடுத்தது இல்லை என்று அவர்கள் எந்த இடத்திலும் சொன்னது கிடையாது. ‘நண்பனுக்கு உதவி செய்’ என்று ஒரு சட்டம் கூறினால், அதற்கு நண்பனுக்குத் தான் உதவி செய்ய வேண்டும்- பெற்றோரை நடுத்தெருவில் விட்டுவிடவேண்டும்!’ என்று பொருள் கொடுத்துவிடாதீர்கள்.
இதைப்போன்று, ‘தொழுகையின் துவக்கத்தில் முழுக்கவனம் இருக்கவேண்டும்’ என்ற சட்டம் ‘தொழுகை’யின் நடுவிலும் முடிவிலும் குறட்டைவிட்டுத் தூங்க வேண்டும்’ எனப் பொருள் கொடுக்காது.

இதைப் படித்த கால் வினாடிக்குள் நீங்கள் அடுத்த வினாவை என்மீது வீசுகிறீர்கள்.
“தொழுகை முழுவதும் ஆழ்ந்த கவனம் இருப்பதைச் சட்டமேதைகள் மறுக்கவில்லை என்றால் அதை அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கலாமே? தொழுகையின் ஆரம்பத் தில் மட்டுமல்லாமல், முழுத்தொழுகையும் சிதறாத கவனத் துடன் தான் நிறைவேற்றப்படவேண்டும்’ என்று சட்டம் இயற்றாததற்குக் காரணம் என்ன? ‘இத்தகைய கவனம் இல்லை என்றால் தொழுகை அறவே நிறைவேறாது!’ என்ற சட்டத்தை எந்த நூலிலும் நான் பார்த்ததில்லையே?”
சட்டம் இயற்றிய அறிஞர்கள் அனைவரும் என் கண்ணோட்டத்தில், ஆழ்ந்த உண்மைகளைத் தெரிந்தவர்கள். முழுக் கவனத்தை வலியுறுத்தும் வழியில் நான் எடுத்துக் காட்டிய-காட்டப் போகிற இறைவசனங்களும் நபிக் கருத்துக்களும் அவர்களுக்குப் புதியவையுமல்ல; புதிரானவையும் அல்ல. அவர்கள் தெளிவான ஞானம் படைத்தவர்கள். சட்டத்துறைக்குத் தம் வாழ்நாள் முழுவதையும் அன்பளிப்பாகக் கொடுத்துவிட்ட அவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்படாத – சட்டத்தினால் கட்டுப்படுத்த புரிந்து முடியாத ஆயிரம் உண்மைகளைப் கொண்டவர்கள்.
அவர்கள் இறை மார்க்கத்தை மட்டுமன்றி. மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் சந்தேகத்திற்கு இடமே இல்லாதபடி சுத்தமாக உணர்ந்திருக்கிறார்கள். இறைவனின் படைப்புக்கள் அனைத்திலும் மனிதன் மிகச் சிறந்தவன் என்பது முற்றிலும் உண்மையான ஒன்று. அவனுக்கு ‘இறைவனின் பிரதிநிதி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு என்பது இதுவரை யாரும் மறுத்துப் பேசாத செய்தி. எண்ணத்தையும் செயலையும் முறைப்படி சரியான வழியில் செலுத்தினால் அவனுக்குச் சாத்தியமில்லாதது – அவனால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்று கூறுகிறவர்களை முற்றிலும் தவறான கருத்துடையவர்கள் என்று நம்மால் சொல்ல முடியாது.
அதே நேரத்தில் மனிதர்கள் அனைவரும் மிகத் தெளிவான செய்தியைக் கூடப் புரிந்து கொள்ளாத காட்டரபியிலிருந்து கண்ணுக்குத் தெரியாததைக் கூடக் கணித்துப் புரிந்து கொள்ளும் ஞானிகள் வரை எல்லாரும் இதே நிலையில் தான் இருக்கிறார்கள் என்று ஒருவன் கூறினால் அவன் கூற்றை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.



