IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 08

நிலைமை இப்படி இருக்கும்போது, ‘இறைவனை வணங்குகிறேன்’ என்று அவர்களால் எப்படிக் கூற முடியும்?
அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் சொல்வது சுத்தமான பொய். இறைவனை நீங்கள் வணங்கவே இல்லை. உங்கள் தொழுகை முடியும்வரை பரபரப்புடன் காத்துக் கொணடிருக்கிற அந்தப் பணக்காரனைத்தான் வணங்கியிருக்கிறீர்கள்’ என்று நீங்கள் குற்றம் சாட்டினால் அல்லது,
‘பள்ளிக்குள் நுழையும் தருணத்தில் உங்களை வழிமறித்து யாசகம் கேட்டுத் தொல்லை கொடுத்த அந்த வயோதிகனைத் தான் நீங்கள் இவ்வளவு நேரம் வணங்கியிருக்கிறீர்கள்’ என்று எடுத்துக் கூறினால் உடனே அவர்கள் கொஞ்சமும் தயங்காமல் மறுப்புத் தெரிவிப்பார்கள்.
தாம் செய்த தவற்றைப் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் துணிவு மக்களில் பெரும்பாலோருக்குக் கிடையாது. சில நேரங்களில் அவர்கள் தம் தவற்றையும் அதற்கான காரணத்தையும் அறவே தெரிந்து கொள்வதில்லை!
இத்தகைய நிலையிலிருக்கும் மனிதன் இறை வணக்கத்தில் ஈடுபட்டால், அவன் எண்ண ஓட்டம் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
‘கிப்லா’வை முன்னோக்கி நின்று ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல்கிறான்-இல்லை, பழக்கத்துக்கு அடிமைப்பட்ட நாவு அவனுக்கே தெரியாமல் இந்த வார்த்தைகளை உதிர்க்கிறது. தன் நாவின் விளையாட்டை அவனால் புரிந்து கொள்ளமுடியாது. ஏனெனில், சற்றுத் தூரத்தில் உட்கார்ந்திருந்த கடன்காரனின் கூர்மையான பார்வை தன்மீது விழுந்துவிட்டது என்பதை அவன் ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டான்.
‘இந்தத் தடவை. அவனுக்கு எப்படிப் பதில் சொல்வது, எத்தனை நாள் தவணை கேட்பது? பலமுறை தவணை கொடுத்துவிட்ட அவன் இப்போது எப்படித் தவணை கொடுப்பான்?’ என்று யோசனை செய்து கொண்டிருக்கும் போதே ‘அல்லாஹு அக்பர்’ என்று அவன் நாவு சொல்லிவிட்டது. அவன் நேராக நிமிர்ந்து நின்றதும் அப்படிச் சொல்வது அவன் நாவுக்குப் பழக்கமாகிவிட்டது.
இங்கு சிறிதும் கவனம் இல்லாத நிலையில் தொழுகை துவக்கப்பட்டிருக்கிறது. எனவே முதற் பண்பு செத்துப் போய்விட்டது. வேண்டுமானால், ‘முதலடியே கோணலாக அமைந்துவிட்டது’ என்று வைத்துக் கொள்ளுங்கள். இதனால் மற்றப் பண்புகள் தோன்றும் வாய்ப்பு அழிந்துபோகிறது, அல்லது ‘கீழ்த்தரமான அச்சம் தொழுகையின் உயிருக்கே ஆபத்தைத் தோற்றுவித்து விடுகிறது’ என்று வைத்துக் கொள்ளுங்கள். இது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது மட்டுமல்ல, சிந்தனை செய்கிற எவரும் மறுக்கத் துணியாத உண்மையுமாகும்.

எனவே உங்கள் தொழுகையில் இருக்க வேண்டியது, இறைவனுக்கு நீங்கள் கொடுக்கிற கண்ணியத்தினால் உங்கள் மனத்தில் தோன்றுகிற அச்சமே தவிர, மேற்குறிப் பிட்ட கீழ்த்தரமான அச்சமல்ல.
இஸ்லாமிய இலக்கியத்தில் இறையச்சம் எனக் குறிக்கப்படுகிற இந்த அச்சம், சற்றுமுன்னர் நான் குறிப்பிட்டபடி, இறைவனுக்கு நீங்கள் அளிக்கும் கண்ணியத்தினால் உருவாகிறது. கண்ணியம் எனும் பண்பு, படைக்கப்பட்டவன் தன்னைப்படைத்து உலகத்துக்கு அனுப்பிய எஜமானனைப் பற்றிச் சிறிதளவேனும் புரிந்து கொள்வதால் தோன்றுகிறது. புரிந்து கொள்வது எனும் பண்பு, தொழுகையில் செலுத்தப்படுகிற ஆழ்ந்த கவனத்தினால் மலர்கிறது.
கவனம், தெளிவு, கண்ணியம், அச்சம் ஆகிய இந்த நான்கு பண்புகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நிற்கின்றன. அவற்றில் ஒன்றை வளர்த்தால் மற்றொன்று தானாகவே வளரும்; ஒன்றை அழித்தால் மற்றொன்றை-அல்லது மற்ற அனைத்தையும் இல்லாமைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்ட ஞானி சுஃப்யான் சவரியின் போதனையை எண்ணத்தில் நிலைப் படுத்திக் கொண்டு அடுத்த பண்புக்கு வாருங்கள் :
“ஒரு மனிதனின் தொழுகையில் பயபக்தி இல்லை என்றால் அவன் தொழுகை வீணாகிவிட்டது.”
இதோடு “நான்காம் பண்பு “ நிறைவு பெறுகிறது.
இறைவணக்கம் அடுத்த பகுதியில் “ஐந்தாம் பண்பு” கேட்கலாம். நன்றி வஸ்ஸலாம்.



