IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 08

‘நீங்கள் எல்லாரும் ஏன் இப்படி நடுங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று நான் கேட்டதற்கு, ‘எங்கள் கற்பனை எங்களை நடுங்கவைத்துக் கொண்டிருக்கிறது’ என்று நீங்கள் பதில் கொடுத்திருந்தால் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
உங்களுக்கு உண்மை தெரியவில்லையா? அல்லது, நடுக்கம் நிற்காத காரணத்தினால் உங்களால் பதில் சொல்ல முடியவில்லையா? இதுவும் இல்லை என்றால், உங்களைப் போலவே நானும் நடந்து போன ஒன்றை நினைத்துக் கற்பனையை அரவணைத்துக் கொண்டு
லுஹர் தொழுகையிலிருந்து அஸர் தொழுகைவரை நடுங்கிக் கொண்டிருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?
என்மீது பாம்பு உரசினாலும் பாம்பைத் தூக்கி எடுத்து என் மடியில் நான் போட்டுக் கொண்டாலும், இறைவனின் கட்டளையில் ஒருபோதும் மாறுதல் ஏற்பட முடியாது, இறைவனின் அனுமதி இல்லாமல் அணுக்கூட அசைவதில்லை என்ற வசனத்தை திருக்குர் ஆனில் நீங்கள் பார்த்ததில்லையா?

மக்காவிலிருந்து மதீனாவுக்கு ‘ஹிஜ்ரத்’ செய்யும் வழியில் பெருமானாரும் அபூபக்ர் (ரலி) அவர்களும் ஸவ்ர் குகையில் மறைந்திருந்தபோது, பாம்புப் புற்றுக்கும் அவர்களுக்கும் அதிகத் தூரமில்லை. அவர்களை வலை போட்டுத் தேடிக் கொண்டிருந்தவர்கள் குகைக்கு அருகில் வந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்த நபித்தோழரின் முகத்தில் அச்சத்தின் முத்திரை தெரிந்தது.
அப்போது, ‘பயப்படாதீர்கள்; இறைவன் நம்முடன் இருக்கிறான்!’ என்று பெருமானார் கூறினார்கள் என்பது உங்களுக்குப் புதிய செய்தியல்ல. அங்கு இங்கு என்று சொல்ல முடியாதபடி எங்கும் நிறைந்த இறைவன் இங்கும் இருக்கிறான் என்பதை உங்களால் நம்ப முடியவில்லையா?
உங்கள் நிலையை நினைத்துப் பெரிதும் வருந்துகிறேன். எதற்கு-யாருக்குப் பயப்பட வேண்டியதில்லையோ அதற்கு – அவர்களுக்கு பயப்படுகிறீர்கள். காரணம், யாருக்குப் பயப்படவேண்டுமோ அவனுக்கு நீங்கள் பயப்படுவதில்லை!
உங்களுக்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். பசி எனும் உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் கொடுமையை அறவே அனுபவிக்காதவர் உங்களில் எவருமில்லை. ஒரு மனிதனுக்குப் பசி வந்துவிட்டால் அவன்மீது குற்றம் சுமத்த முடியாது. ஆனால் தன் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக அவன் திருடினால் சட்டம் அவனைத் தண்டிக்கத் தவறாது.
தன் வீட்டில் வயிறு புடைக்கச் சாப்பிடுகிறவன் மற்றவரின் வீட்டில் தயாரிக்கப்படும் உணவைப் பார்த்து ஆசைப்படமாட்டான். அவன் பசிக்காகத் திருடுகிறான் என்றால், அல்லது மற்றவர் தின்பதைப் பார்த்து ஆசைப்படுகிறான் என்றால்-அவன் தன் வீட்டில் முறைப்படி சாப்பிடவில்லை என்று அர்த்தம்.
இது போலவே நீங்கள் பாம்புக்கும் பக்கத்து வீட்டில் வளர்க்கப்படுகிற மாட்டுக்கும் பயப்படுகிறீர்கள் என்றால், அவற்றைப்படைத்த இறைவனுக்கு நீங்கள் பயப்படவில்லை என்பது பொருள்.
எனவே இறைவனுக்குப் பயப்படுங்கள்; அனைத்தும் உங்களுக்குப் பயப்படும். மற்ற யாருக்கும், எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏற்படாது.
எச்சரிக்கிறேன்: நீங்கள் இறைவனுக்குப் பயப்படவில்லை என்றால், உலகிலுள்ள அனைத்துக்கும் பயப்பட வேண்டிய நிலைமை உங்களுக்கு ஏற்படும்…
பக்தாதைச் சேர்ந்த ஞானியின் பேச்சு, தொழுகை சிறப்படைவதற்குத் தேவையான பண்புகளில் ஒன்றான இறையச்சத்துக்குப் போதுமான அளவு விளக்கம் கொடுத்துவிட்டது. இறைவணக்கத்தின்போது உங்கள் உள்ளத்தில் எப்படிப்பட்ட அச்சம் நிரம்பியிருக்க வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.
மீண்டும் கூறுகிறேன : ஆழமான கண்ணியத்தினால் பிறக்கிற அச்சமே நான் வலியுறுத்தும் பண்பு. விஷ ஜந்துக்களையும் வனவிலங்குகளையும் மிருகக் குணம் படைத்த மனிதர்களையும் நீங்கள் நெருங்கும்போது உங்கள் மனத்தில் தோன்றுகிற அச்சத்தை நான் குறிப்பிடவில்லை; பலவீனப் பட்ட மனத்திலும் பயிற்சிக்கு உட்படாத உள்ளத்திலும் தோன்றுகிற நடுக்கத்தை நான் குறிப்பிடவில்லை.
இவை இரண்டும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை என்பதை நினைவில் பதித்துக் கொள்ளுங்கள். முன்னது இறைவணக்கத்தில் உயிரோட்டத்தைத் தோற்றுவிக்கிற அதே நேரத்தில் பின்னது தொழுகையின் நோக்கத்தையே கட்டோடு அழித்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
தன்னையும் தன் வலிமையையும் உணராத காரணத்தால் தலை தூக்குகிற இந்த அச்சத்துக்கு ஒருவன் தன் தொழுகையில் சிறிதேனும் இடம் கொடுத்தால், அது அவன் தொழுகையின் நோக்கத்தையே அழித்துவிடும் என்பது மட்டுமல்ல – இதுவரை நான் வரிசைப்படுத்திய பண்புகளையும் அடுத்து எழுதப்போகும் பண்புகளையும் இருந்த இடம் தெரியாமல் துரத்தியடித்துவிடும்.
இங்கு அச்சம் எனப்படும் உணர்வு இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. அவற்றில் ஒன்று வரவேற்கத் தகுந்தது; பெருமுயற்சி எடுத்தேனும் வளர்க்கப்பட வேண்டியது. மற்றொன்று வெறுக்கத் தகுந்தது; கடினமான பயிற்சியின் வழியிலேனும் நசுக்கப்பட வேண்டியது.
கடன்காரனுக்குப் பயப்படுகிறவர்களும் பிச்சைக்காரனின் தொல்லைக்குப் பயப்படுகிறவர்களும் கீழ்த்தரமான அச்சத்துக்கு அடிமைப்பட்டவர்கள். அவர்கள் இறை வணக்கத்தை மேற்கொள்ளும்போது, அவர்களின் எண்ணத்தில் கடன்காரனும் பிச்சைக்காரனும் கைகோத்து நிற்பார்களே தவிர செல்வத்தையும் வறுமையையும், எண்ணத்துக்கும் செயலுக்கும் பின்னால் அமைத்து வைத்து, எல்லாருக்கும் தன் பேரன்பை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிற இறைவனைச் சிறிது நேரம் கூட அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாது.



