IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 07

“இறைத் தூதர் அவர்களே! இன்று சூரியக் கிரகணம் ஏற்பட்டிருக்கிறது. தங்களின் ஆண் குழந்தை இறந்தது.
குறித்து வானம் துக்கம் தெரிவித்துக் கண்ணீர் வடிக்கிறது” என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். பெருமானார் சிரித்தார்கள்.
“நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு. என் குழந்தை இறைவனின் கட்டளைப்படி இறந்துவிட்டது. சூரிய சந்திரக் கிரகணங்கள் இறைவனின் அமைப்பையொட்டி இயற்கையில் தோன்றுகின்றன; என் குழந்தை இறந்ததற்கும் இந்த இயற்கை நிகழ்ச்சிக்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது.”
ருகூவு சுஜூதினால் உடலுறுப்புக்களுக்கும் கை கால்களின் தசைகளுக்கும் பயிற்சி கிடைக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
தொழுகையினால் மனிதனுக்கு இன்னும் எத்தனையோ விதமான நன்மைகள் ஏற்படுகின்றன என்பதையும் நான் மறுக்கவில்லை.
ஆனால் ‘இந்தப் பயிற்சிதான் ருகூவுக்கும் சுஜூதுக்கும் குறிக்கோள்’ என்று நீங்கள் கூறினால், அது இஸ்லாத்தின் சட்டத்துக்கு நீங்கள் கற்பிக்கும் காரணமாக இருக்குமே தவிர தன் சட்டத்தில் இஸ்லாம் மறைத்து வைத்திருக்கிற நோக்கத்துக்கு விளக்கமாக அமையாது!

காலை நேரத்தில் உங்களுக்குக் குழந்தை பிறந்தால்; உங்கள் குழந்தையைப் பார்ப்பதற்காகத்தான் – அல்லது அதற்கு ஆசி கூறுவதற்குத்தான் அன்று சூரியன் உதயமாகியிருக்கிறது என்று உங்களால் கூற முடியுமா?
தொழுகைக்கு ‘பாங்கு’ சொல்லப்பட்டுக் கொண் டிருக்கும் நேரத்தில் பத்து வயது நிரம்பிய உங்கள் மகன்-அல்லது பேரன் படிக்கட்டில் தவறிவிழுந்து பல்லை உடைத்துக் கொண்டால் பாங்கு சொன்னவர் மீது நீங்கள் வழக்குத் தொடர முடியுமா?
உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுங்கள். இல்லாததை உள்ளதாக்க முயற்சி செய்யாதீர்கள். இஸ்லாத்தின் சட்டங்களுக்குக் காரணம் கண்டு பிடிக்கும் வழியில் திருக்குர்ஆனையும் ஹதீஸ் தொகுப்புக்களையும் சட்ட நூல்களையும் ஆராய்ந்து பாருங்கள். இது பாராட்டுக்குரிய செயல். ஆனால் காரணம் தெளிவாகாத இடத்தில் கற்பனைக்குத் தோன்றியதை எல்லாம் காரணமாக்க முற்படுவது முற்றிலும் தவறான செயல்.
இப்படிப்பட்ட சிந்தனையும் கற்பனையும், சட்டத்தின் நோக்கத்தையும் குறிக்கோளையும் நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்கிற வாய்ப்பையே அழித்துவிடக் கூடும். உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வெளிவரத் துடிக்கிற உண்மைகளை கற்பனையில் தோன்றிய ‘அவசர முடிவு’ எனும் பாறையைத் தூக்கிப் போட்டு நசுக்கிவிடாதீர்கள்.
உங்கள் அடிமனத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் முறைப்படி தொழுகிற மனிதனைப் பாருங்கள். உங்கள் சந்தேகத்திற்கு நிச்சயமாக தீர்வு கிடைக்கும். அவன் நேராக நிமிர்ந்து நின்று தொழுகையைத் துவங்கிய சிறிதுநேரத்தில் முழங்கால்களில் கைகளை வைத்துக் குனிந்து, “வலிமைமிக்க இறைவனைத் துதிக்கிறேன்” எனக் கூறுகிறான். ருகூவு என்று குறிக்கப்படுகிற இந்தச் செயலையடுத்து மீண்டும் நிமிர்ந்து நிற்கிறான் – தரையில் விழுந்த பொருளைக் கையில் எடுத்துக் கொண்டு நிமிர்ந்து நிற்பவனைப்போல்! அவன் நிமிரும்போதே அவன் நாவிலிருந்து “பாராட்டுகிறவனின் பாராட்டுதலை இறைவன் கேட்டுக் கொண்டான்” எனும் துதிப்பு வெளிப்படுகிறது.
அவன் நிமிர்ந்து நேராக நின்றதும். “எங்கள் நாயனே! அனைத்துப் புகழுக்கும் நீயே உரித்தானவன்” என்று கூறுவதன் மூலம் இறைவனுக்குக் கண்ணியமும் உயர்வும் அளிக்கிறான்.
அப்புறம் தலையைத் தரையில் வைப்பதற்குத் தயாராகிறான். நேராக நிற்பவன் குறிப்பிட்ட வகையில் முழங்கால்களைத் தரையில் ஊன்றி, கவிழ்த்து வைக்கப்பட்ட இரண்டு கைகளுக்கும் நடுவில் தன் சிரத்தைத் தரையில் வைக்கிறான். வெளியுறுப்புகளிலிருந்து இந்தச் செயல்கள் உருவாகிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அவன் நாவிலிருந்து ‘இறைவன் மிகப் பெரியவன்’ எனும் வார்த்தைகள் நீண்டு வெளிவருகின்றன.
இறைவனை மிகப் பெரியவன் என்று கூறுவதன் மூலம் ‘நான் மிகச் சிறியவன்’ என்ற பொருளை உணர்ந்து பணிவுக்கு அவன் இலக்கணம் வகுக்கிறான்.
சிரத்தை தரையில் வைத்துக் கொண்டு ‘உயர்வுமிக்க என் நாயனைத் துதிக்கிறேன்’ என்று கூறுகிறான். சுஜூது என்று அழைக்கப்படுகிற இந்தச் செயலையடுத்துச் சிறிது நேரம் நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டு மீண்டும் சிரத்தைத் தரையில் வைக்கிறான்; இறைவனைத் துதிக்கிறான்…
இப்போது நெஞ்சைத் தொட்டுப் பார்த்துப் பதில் சொல்லுங்கள்; ருகூவும் சுஜூதும் இடுப்புக்கும் தசை களுக்கும் அமைக் கப்பட்ட பயிற்சியா? அல்லது, படைத் தவனுக்கு முன்னால் நின்று படைக்கப்பட்டவன் தன் நிலையை உணரும் முயற்சியா?
கண்ணியம் எனப்படும் இந்த மூன்றாம் பண்பு தனித்துத் தோன்றக் கூடிய ஒன்றல்ல. இந்தப் பண்பு முந்திய இரண்டு பண்புகளிலிருந்தும் தான் தோன்றுகிறது.
கவனம் என்பது முதற்பண்பு. இந்தப் பண்பு இல்லாமல் நீங்கள் இறைவணக்கத்தில் ஈடுபட்டால், என்ன செய்கிறீர்கள் – எப்படிச் செய்கிறீர்கள்-எதற்காகச் செய்கிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியாது. தொழுகையின்
நடுவில் ருகூவு செய்ய மறந்துவிட்டீர்கள் என்பதையும், இரண்டு தடவைக்குப் பதிலாக ஒரே ஒரு தடவை தான் சுஜூது செய்திருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்ள முடியாது.
தொழுகையில் உங்களுக்குத் தெளிவு ஏற்படாது. ஏனெனில் தெளிவு என்பது கவனத்திலிருந்து உருவாகும் பண்பு. எனவே கவனம் இல்லாத எந்தச் செயலிலும் தெளிவை எதிர்பார்க்க முடியாது. கவனத்துடன் செய்யப்படுகிற எந்தச் செயலிலும், நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தெளிவு தானே வந்து நுழைந்துவிடும்.
கவனம் எனும் பண்பு, தொழுகையில் என்ன செய்கிறீர்கள்-என்ன சொல்கிறீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்திக் காட்டுகிற அதே நேரத்தில், தெளிவு எனும் பண்பு, எதற்காகச் சொல்கிறீர்கள் என்று சுட்டிக் காட்டுகிறது; எப்படிச் செய்ய வேண்டும் எப்படிச் சொல்ல வேண்டும் என்று எடுத்துக் காட்டுகிறது. அங்கே பிறப்பது மூன்றாம் பண்பு-கண்ணியம் எனும் மனப்பண்பு.
முந்திய இரண்டு பண்புகளும் முழுமையாகத் தோன்றி விட்டால், கண்ணியம் எனும் மூன்றாம் பண்பு அழைப்பே இல்லாமல் உருவெடுத்துவிடும்.
குழந்தைகள் வீட்டுத் தலைவனுக்கும் வருகிற விருந்தாளிக்கும் கண்ணியம் கொடுப்பதில்லை – இப்படிச் சொல்வதைவிட, அவற்றின் மனத்தில் கண்ணியம் தோன்றுவதில்லை என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். கண் கொட்டாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவற்றின் மனத்தில் மரியாதை தோன்றுவதில்லை.



