IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 07  

மேற்குறிப்பிட்ட இறைவசனம் உடலும் உள்ளமும் ஒருமித்து நிற்கும்போது உருவாகும் தொழுகையைத்தான் சுட்டிக் காட்டுகிறதே தவிர, அவை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் விலகி நிற்கும்போது நிறைவேற்றபடுகிற தொழுகை அல்ல.

இறை வணக்கத்தில் ஈடுபடும் உங்களுக்கு, திரண்ட கவனம் – புரிந்து கொள்ளும் பக்குவ நிலை ஆகிய இரண்டு பண்புகளும் இருந்தால் தொழுது கொண்டிருக்கும் போதே பல உண்மைகளை நீங்கள் சந்தேகத்திற்குச் சிறிதும் இடமில்லாதபடி தெரிந்து கொள்ள முடியும்.

இந்த வழியில் உங்களுக்குக் கிடைக்கிற அடிப்படையான அந்தரங்க அறிவு, உங்கள் அடிமனதைத் தொட்டுப் பார்த்து அங்கே குவிந்து கிடக்கிற குணங்களையும் பழக்கங்களையும் மாற்றியமைக்கிற சக்தி படைத்தது. குணமும் பழக்கமும் மாறுதல் அடையும்போது, அவற்றிலிருந்து தோன்றுகிற எண்ணங்களும் செயல்களும் புதிய உருவங்களைப் பெறுகின்றன. இதனால் நல்ல செயல்களில் விருப்பமும் கெட்ட செயல்களில் வெறுப்பும் ஏற்படுகின்றன.

இதன் விளைவு: கெட்ட செயல்களில் இன்பம் கண்ட நீங்கள் இப்போது அவற்றைப் பார்த்து – அல்லது அவற்றை நினைத்து முகத்தைச் சுழிக்கிறீர்கள். ஏற்கெனவே உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருந்த ஒன்று இப்போது வெறுப்புக்குரிய ஒன்றாக மாறுகிறது.

மொத்தத்தில், உங்கள் தொழுகை அல்லது அதிலிருந்து கிடைக்கும் அறிவு தீய செயல்களைத் தடுத்து நிறுத்துகிறது. நான் குறிப்பிட்ட இரண்டாம் பண்புக்கு உங்கள் தொழுகையில் இடமில்லை என்றால், இந்த நன்மைகளை உங்களால் அடையவே முடியாது.

இப்போது, தொழுகை சிறப்படைவதற்குத் தேவை யான அடுத்த பண்பை நாம் ஆராய வேண்டும். இதற்கு நாம் கொடுக்கும் பெயர் –

மூன்றாம் பண்பு

-இது தொழுகையின்போது இறைவனுக்கு நீங்கள் கொடுக்கிற கண்ணியத்தைக் குறிக்கும். இறை வணக்கத்தில் நீங்கள் செய்கிற செயல்கள் ஒவ்வொன்றும் கூறுகிற வார்த்தைகள் அத்தனையும் வணங்கப்படு கிறவனைப் பெரிதும் கண்ணியப்படுத்துபவையாக அமைய வேண்டும். இதற்கு மாறான வகையில் எந்த அசைவும் எவ்வித ஓசையும் உங்களிடமிருந்து வெளிவரக்கூடாது. தொழுகை முழுவதும் இந்த மனப்பண்பு உங்களிடம் நிலைத்து நிற்க வேண்டும்.

*தொழுகையை நிறைவேற்ற முற்படும் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். காலத்தின் கட்டுப்பாட்டுக்கும் இடத்தின் எல்லைக் கோட்டுக்கும் அப்பாற்பட்ட ஒருவனின் சன்னி தானத்துக்கு உங்கள் தொழுகையை நுழைவாசலாக்க முற்படுகிறீர்கள். தொழுகையைத் துவங்கிவிட்ட நீங்கள், எல்லாம் தெரிந்தவனும் எங்கும் நிறைந்தவனுமான பேரரசனின் திருச்சபையில் நின்று கொண்டிருக்கிறீர்கள். தொழுது கொண்டிருக்கும் நீங்கள், மனிதனின் பிடரி நரம்பைவிட அருகில் இருப்பவனும் முக்காலத்தை முழுமையாகத் தெரிந்தவனுமான மாமன்னனோடு உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

மிகப்பெரும் சக்தி படைத்த எஜமானனுக்கு எதிரில் நிற்கிற மிகத் தாழ்ந்த அடிமை ஒருவனின் மனநிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவனுக்கு இருக்கிற மனநிலை தொழுகையின்போது உங்களுக்கு இருக்க வேண்டும். எஜமானன் மீது அவன் மனத்தில் இருக்கிற கண்ணியம், தொழுகையின்போது இறைவனுக்கு நீங்கள் கொடுக்கிற கண்ணியத்துக்குத் தாழ்ந்ததாக இருக்க வேண்டும்.

நீங்கள் இறைவனை வணங்கும்போது உங்களிடம் இந்தப் பண்பு பரவி நின்றால், உங்கள் தொழுகையில் பணிவுக்கும் பக்திக்கும் பஞ்சம் இருக்காது; தெளிவுக்கும் ஞானத்துக்கும் அங்கே வழி பிறக்கும். பெருமானார் எப்படித் தொழுதிருப்பார்கள் என்பதற்குச் சிறிதளவேனும் விளக்கம் கிடைக்கும்.

ஒரு மனிதன் முறைப்படி இறைவனை வணங்கினால் அவன் தொழுகையில் பணிவும் பக்தியும் பரவி நிற்கும் என்பது உண்மை என்றாலும் தொழும்போது அவன் செய்ய வேண்டிய வேலைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நோக்கமுண்டு. உள்ளத்தைக் கறைநீக்கித் தெளிவாக்குவதும் இறைவனைப் பற்றிய நினைவை அதில் நிலைப்படுத்துவதும் ‘ஈமான்’ எனப்படும் நம்பிக்கைக்கு வலிமை சேர்ப்பதும் தொழுகையின் அடிப்படையான நோக்கங்கள். இந்த நோக்கங்கள் முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு மனிதனுக்கும் இஸ்லாம் தொழுகையைக் கடமையாக்கியிருக்கிறது.

இறைவணக்கத்தின் பகுதிகளான ‘ருகூவும்’ ‘சுஜூது’ம் இறைவனைக் கண்ணியப்படுத்துகிற ஒரே நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் சந்தேகத்திற்குச் சிறிதும் இடம் கிடையாது. “இந்தச் செயல்களினால் இடுப்புக்கும் கை கால்களின் தசைகளுக்கும் தேவையான பயிற்சி கிடைக்கிறது. எனவே ருகூவுக்கும் சுஜூதுக்கும் இதுதான் குறிக்கோள்!” என்று நீங்கள் சொல்கிறீர்களா?

நீங்கள் சொல்வதைக் கேட்டதும், நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த உரையைாடல் ஒன்று என் நினைவுக்கு வருகிறது.