IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 07  

“பெருமானாரின் சொல்லிலும் செயலிலும் மறைந் திருக்கிற உட்பொருள் தொழுகையின்போது எனக்குத் தெளிவாகிறது. தொழும்போது கிடைக்கும் தெளிவு நான் தொகுக்கும்போது தொடர்ந்து வருகிறது…”

சிறிது நேரம் சிந்தித்துப் பாருங்கள்: இறைவசனம் ஒன்றின் உட்பொருளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

“தொழுகை மனிதனைத் தீய காரியங்களிலிருந்து தடுக்கிறது..”

வெளியுறுப்புகளின் அசைவுகளுக்கு நீங்கள் ‘தொழுகை’ எனப் பெயரிட்டால் அந்தத் தொழுகை என்பது, நாம் விவரித்துக் கூறிக் கொண்டிருக்கிற பண்புகளுக்கு அடுத்தபடியாக, குறிப்பிட்ட சில செயல் களையும், அவ்வப்போது ஓதப்படுகிற வார்த்தைகளையும் கொண்டது. நேராக நிற்பது, முழங்கால்களில் கைகளை வைத்துக் குனிவது, சிரத்தை தரையில் வைப்பது, சற்று நேரம் நிமிர்ந்து உட்கார்ந்து மீண்டும் சிரத்தை தரையில் வைப்பது, ஆகிய தொகுப்புக்கு ரக்அத் என்று பெயர்.

உங்களிடமிருந்து உருவாகிற தீய செயல்களை எப்படித் தடுக்க முடியும்?

பள்ளிக்குள் புகுந்து பலருக்கு மத்தியில் நீங்கள் நிறைவேற்றுகிற – அல்லது நிறைவேற்றுவதாகக் காட்டுகிற தொழுகைக்கும், யாரும் இல்லாத இடத்தில் எவருக்கும் தெரியாது என்ற நம்பிக்கையினால் செய்கிற தீய செயல்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

‘நான் தொழுவது இறைவனுக்காக மற்றவர்களின் வயிற்றில் மண்ணள்ளிப் போடுவது என் மனைவி மக்களுக்காக!’ என்று, வேண்டுமென்றோ விளையாட்டாகவோ மக்கள் கூறும் வார்த்தைகள், ஒரு மனிதனின் தொழுகை அவன் செயலைக் கட்டுப்படுத்தாது எனும் கருத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா?

தொழுகையை நிறைவேற்றியதும், தொழாதவர்கள் செய்யும் தவற்றுக்கு விளக்கம் கொடுப்பதை அடுத்த வேலையாக கொண்டவர்களை நாம் பார்த்து இருக்கிறோம். இறைவணக்கத்தில் ஈடுபடுவதற்கு முன்னர், அடுத்த வீட்டார் பற்றி அரை மணிநேரம் புறம் பேசுவதை முன்னுரையாக்குகிறவர்களை நாம் கண்டிருக்கிறோம். தொழுகைக்கு முன்னாலும் பின்னாலும் மார்க்கத்திற்கு முரணான தவறுகளில் ஒன்றை அவசியம் செய்துவிடுவது எனும் தீர்மானத்துக்கு வந்தவர்களைப்போல் நடந்து கொள்கிற மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன்; நீங்களும் பார்த்திருக்கலாம்.

முன்னாலும் பின்னாலும் தவறு செய்யும் அவர்கள் தொழுகையின் நடுவில் என்ன தவறு செய்கிறார்கள் என்று எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது. அது இறைவனுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.

இந்தச் செய்திகளை எல்லாம் சிந்தித்துப் பார்க்கும் போது ஒரு மனிதனின் தொழுகை அவன் செய்யும் தவறுகளைத் தடுப்பதில்லை எனத் தீர்மானிக்கத் தோன்றுகிறது.

நான் கேட்கிறேன், நீங்கள் இப்படிப்பட்ட தீர்மானத்துக்கு வருகிறீர்களா?

நீங்கள் ‘ஆம்’ என்று விடை கொடுத்தால் உங்கள் விடையிலிருந்து இரண்டு உண்மைகளை நான் தெரிந்து கொள்ள முடியும்.

ஒன்று: மேலே இடம் பெற்ற இறைவசனத்தை நீங்கள் நன்கு புரிந்து கொள்ளவில்லை. அதன் அடியில் மறைந்து ஒளிவிட்டுப் பிரகாசிக்கிற உட்பொருள் உங்கள் கண்களுக்குப் புலப்படவில்லை.

இரண்டு: பல்லாண்டுகளாக நீங்கள் நிறைவேற்றி வந்திருக்கிற ஐங்காலத் தொழுகை மிக முக்கியமான உண்மை ஒன்றை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கத் தவறி விட்டது – நீங்கள் கற்றுக் கொள்ளும் நிலையில் இல்லாத காரணத்தால்!

என் கேள்விக்கு நீங்கள் இல்லை – அறவே இல்லை என்று பதில் தருகிறீர்களா?

அப்படியானால், உங்களுக்கு நற்செய்தியொன்று சொல்லப் போகிறேன்: இறைவணக்கம் உங்களுக்குச் சிறிதளவேனும் உள்ளறிவை உணர்த்திக் காட்டிவிட்டது! நீங்கள் நிறைவேற்றும் தொழுகை உங்களுக்கு அறிவைக் கற்று கொடுக்கிற ஆசானாக உருமாறத் துவங்கிவிட்டது!