IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 06 

Readhere: Irai Vannakam – EP 01 – Part 02. Irai Vannakam – EP 01 – Part 03 Irai vannakam – EP 01 – Part 04 Irai Vanakam – EP 01 – Part 05

ஹஜ்ரத் அவர்களின் இறை வணக்கம் புத்தகம், ஆறாம்  பகுதிக்கு உங்களை வரவேட்கிறோம்.

பழக்கமும் பரம்பரையும்

இந்தத் தீய பண்புகள் பெற்றோரிடமிருந்து பிறப்பி லேயே வந்துவிட்டன என்று கூறுவது சரியல்ல. பெற்றோரின் அச்சு, குழந்தைகள்மீது பதிகிறது என்பது உண்மை. ஆனால் ஒரு மனிதனின் குணங்கள் அத்தனையும் அவன் பெற்றோரிடமிருந்தே அவனுக்கு வந்திருக்கின்றன எனக் கூறுவது தவறு.

திக்குவாயனின் குழந்தை குறிப்பிட்ட வயதுக்கு வரும் போது பெற்றவனைப் போலவே திக்கித் திக்கிப் பேச ஆரம்பிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். பரபரத்த மனம் படைத்த பெற்றோரின் குமாரன் எதிலும் நிலை கொள்ளாமல் பரபரப்புடன் வாழ்வதைக் கண்டிருக் கிறோம். ‘மூளைக் கோளாறு இவனுக்கு மட்டும்தான் இருக்கிறதா? இவனைப் பெற்றவன் இன்னும் பைத்தியக்காரனாகத்தான் இருக்கிறான்’ என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.

இதை எல்லாம் பார்க்கும்போது, பெற்றோரின் குணம் பிள்ளைகளுக்குத் தாவிவருகிறது என்று தீர்மானிக்கத் தோன்றுகிறது. ஆனால் இது முற்றிலும் உண்மையல்ல.

பெற்றோருக்கும் குழந்தைக்குமுள்ள தொடர்பைக் கூர்ந்து கவனித்தால், கோளாறு எந்த இடத்தில் ஆரம்பிக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். பெரும்பான்மை யாக எல்லாக் குழந்தைகளும் ஆரம்பத்தில் பெற்றோருடன் தான் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருக்கின்றன. அவற்றிற்குப் பெற்றோரை தவிர்த்து வேறு யாருடனும் அதிகத் தொடர்பு கிடையாது. பெற்றோர் பேசுவதையும் நடப்பதையும் கூர்ந்து கவனிக்கும் குழந்தைகள் அவர்களைப் போலவே பேசுவதற்கும் நடப்பதற்கும் கற்றுக் கொள்கின்றன.

இதனால் அந்தக் குழந்தைகள் வளர்ந்து உலகத்தில் பழகும்போது அவர்களிடம் பெற்றோரின் குணத்தையும் நடத்தையையும் உங்களால் பார்க்கமுடிகிறது. எனவே ஒரு மனிதனின் குணங்கள் அத்தனையும் அவன் பெற்றோரிட மிருந்து வந்த சொத்துக்கள் என்று கூற முடியாது.

இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களின் குமாரன் தன் தந்தைக்கு முற்றிலும் மாறுபட்டவன். நபித்தோழர் அலியாரின் தந்தை முஸ்லிமே அல்ல! பல நூற்றாண்டு. களுக்கு முன்னர் ஆஸர் என்ற ஒருவர் சிலைகளைச் செய்து விற்பனைச் செய்து கொண்டிருந்தார். அவருக்கு பிறந்த ஆண்குழந்தை ஒன்று பிற்காலத்தில் ஏகத்துவக கொள்கையை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தபோது, அங்கு இப்ராஹீம் நபி என்ற இறைத் தூதரை உலகம் கண்டது.

பெருமானாரும் அபூலஹப் என்று அழைக்கப்படுகிற அப்துல் உஸ்ஸாவும் ஒரே பரம்பரையில்தான் தோன்றி யிருக்கிறார்கள் என்பது நீங்கள் தெரிந்து கொள்ளாத செய்தியல்ல. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் மாறுபட்டவர்கள் என்பது எவரும் புரிந்து கொள்ளாத ரகசியமல்ல.

இப்படிப்பட்ட செய்திகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து ஆராயும்போது நமக்குக் கிடைக்கும் மிகப்பெரும் உண்மை இதுதான்.

மனித வாழ்க்கையின் தலையெழுத்தைத் தீர்மானிப்பது, அவன் வளரும்போது மற்றவர்களிட மிருந்து பெற்றுக் கொள்கிற பயிற்சியே தவிர, பெற்றோரிடமிருந்து அவனுக்கு கிடைத்திருக்கிற பரம்பரை வித்தல்ல. மற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிற பயிற்சி என்று சொல்வதைவிட, மற்றவர் களைப் பார்த்து அவன் உருவாக்கிக் கொள்கிற பழக்கம் என்று கூறினால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

விளையாட்டுப்போல் செய்யப்படுகிற செயல் எண்ணப்படுகிற எண்ணம் திரும்பத் திரும்பச் செய்ததாலும் எண்ணியதாலும், வலிமை பெற்று பழக்கமாக மாறுகிறது. அப்புறம் அது மனிதனையே ஆளத் துவங்கிவிடுகிறது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமான பழக்கத்துக்கு அடிமைப்பட்டுக்கிடக்கிறான் எனும் கருத்து உண்மைக்குப் புறம்பானதல்ல.

ஒரு மனிதன் நல்லவனாகவோ கெட்டவனாகவோ இருப்பதற்கு, தெரிந்தோ தெரியாமலோ, அவன் வளர்த்துக் கொண்ட பழக்கங்கள்தான் மூலககாரணங்கள் என்று நாம் துணிந்து கூறலாம். 

ஒருவன் ஒருவன் நல்லவனாக இருக்கிறான் என்றால், அவன் நன்மைகளைச் செய்து பழகியவன் என்றும் கெட்டவனாக இருக்கிறான் என்றால் அவன் தீமைகளுக்கு நடுவில் கிடந்து புரண்டு அவற்றைப் பழகிக்கொண்டவன் என்றும் கூறப்படும் கருத்து, நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், முற்றிலும் உண்மையானது.