IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 06 

மேலோட்டமாக அமைகிற வெளிப் பார்வைக்குத் தோன்றுவதுபோல், புரிந்து கொள்ளும் சக்தியும் ஒருமித்த கவனமும் ஒரே பண்பல்ல. இவை இரண்டும் ஒன்றுக் கொன்று முற்றிலும் மாறுபட்டவை.

நான் எழுதுவதையும் பேசுவதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் என்றால், என் எழுத்திலும் பேச்சிலும் உங்களுக்குக் கவனம் இருக்கிறது என்பது பொருள். நீங்கள் என்னிடம் பேசியதையும் எனக்கு எழுதி யனுப்பியதையும் நான் புரிந்து கொள்ளவில்லை என்றால், கவனத்தை நான் இழந்து விட்டேன் என்று அர்த்தம்..

நான் புரிந்து கொள்ளும் அளவு, எனக்கு இருக்கும் கவனத்தின் அளவைப் பொறுத்தது. உங்கள் பேச்சிலும் எழுத்திலும் எனக்கு சிறிதளவு தான் கவனம் இருக்கிறது என்றால், உங்கள் பேச்சையும் எழுத்தையும் என்னால் சிறிதளவு தான். புரிந்து கொள்ளமுடியும். நான் சிறிதும் கவனம் இல்லாத நிலையில் இருக்கும்போது – அல்லது என் கவனம் வேறு ஏதோ ஒன்றில் ஊன்றி நிற்கும்போது நீங்கள் என்னைப் பார்த்து என்ன சொன்னாலும், எதை எழுதிக் கொடுத்தாலும் அதை என்னால் அறவே புரிந்து கொள்ள முடியாது.

இங்கு கவனமும் தெளிவும் வெவ்வேறான பண்பு களானாலும், நெருக்கமாக நட்புக் கொண்டிருக்கின்றன.

நீங்கள் செய்யும் காரியத்தில் முன்னதைப்பிரித்து எடுத்துவிட்டால் பின்னது கோபித்துக் கொண்டு வெளியில் சென்றுவிடும். அப்போது உங்களிடமிருந்து வெளிவருவது உறுப்புக்களினாலான அசைவுகளின் திரட்டாக இருக்குமேயன்றி, பொருள் பொதிந்த செயலாக இருக்காது; உங்கள் நாவிலிருந்து வெளிப்படுவது ஓசைகளின் தொகுப்பாக இருக்குமேயல்லாமல், : அர்த்தமுள்ள வார்த்தையாக இருக்காது.

ஆனால் வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு உண்மை நிலை தெரியப் போவதில்லை. வெளியில் தெரிவதைக் கவனிக்கும் அவர்கள் உங்கள் அசைவு களுக்கு ‘செயல்கள்’ என்றும் ஓசைகளுக்கு ‘வார்த்தைகள்’ என்றும்-பெயர் கொடுப்பார்கள்.

இத்தகைய பலவீனத்துடன் நீங்கள் தொழுகையை நிறைவேற்றினால், வெளியிலிருந்து பார்க்கிறவர்களின் பாராட்டுதலை அது உங்களுக்குத் தேடித்தரலாம்; நான் மறுக்கவில்லை, ஆனால் உள்ளத்தை உற்றுப் பார்க்கிற இறைவனை இப்படிப்பட்ட தொழுகையினால் நீங்கள் ஏமாற்ற முடியாது!

“இறைவன் உங்கள் உருவங்களையும் செயல்களையும் பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களையும் எண்ணங் களையும்தான் பார்க்கிறான்” என்று பெருமானார் கூறியிருக்கிறார்கள்.

நீங்கள் இறைவனின் பாராட்டுதலைப் பெற விரும்பு கிறீர்களா? மக்களையும் சட்டங்களையும் ஏமாற்ற நினைக்கிற வஞ்சகக் குணத்தை அடியோடு துறந்துவிட்டு, அவர்களுக்கும் அவற்றிற்கும் உயிர் கொடுத்த இறைவனின் அன்புக்கு உரிமை கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுகிறீர்களா? ‘தொழுகை என்பது ஒவ்வொரு மனிதனும் அவசியம் நிறைவேற்ற வேண்டிய கடமை மட்டுமல்ல, மிகத் தாழ்ந்த நிலையில் இருக்கிற மனிதனை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிற அற்புதப் பயிற்சியுமாகும்’ என்று ஞானிகள் கூறியிருப்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து கொள்ளும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?

அப்படியானால், அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு:

அப்படியானால், அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு:

இறைவனுக்கும் மனிதனுக்குமிடையே, சுவர் எழுப்பி வைத்திருக்கிற தீய பண்புகளை அழித்து விட்டு அவற்றின் இடத்தில் உயர்ந்த பண்புகளை நிலைப்படுத்துங்கள். அதற்கான பயிற்சிகளில் உங்கள் முயற்சி முழுவதையும் செலவிடுங்கள். கறை படிந்த உள்ளத்தைக் கண்ணாடியாக்குங்கள். இதுவரை நீங்கள் செய்துவந்த செயல்களையும் பேசிவந்த பேச்சுக்களையும் உற்றுப்பார்த்து அவற்றிற்குக் காரணமான எண்ணங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவேதான், ‘தொழுகையின்போது உருவாகிற செயல்களையும் சொல்லப்படுகிற வார்த்தைகளையும் நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்’ என்று நான் கூறுகிறேன்.

தொழுகை முழுவதும் உயிரோட்டம் நிரம்பி நிற்பதற்குப் பெரிதும் தேவையான பண்புகளில் இது இரண்டாவது. இது இல்லை என்றால், தொழுகையில் நீங்கள் சொல்கிற ‘தஸ்பீஹ்’ எனும் துதிப்புகளையும் திருக் குர் ஆனிலிருந்து ஓதப்படுகிற இறைவசனங்களையும் புரிந்து கொள்ளும் பேறு உங்களுக்குக் கிடைக்காது. தொழுகையில் நீங்கள் கூறுகிற எல்லா வார்த்தை களுக்கும் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் என் கருத்து.

இந்த பண்பை நீங்கள் வளர்த்துக் கொண்டால், மற்ற நேரங்களில் ஆழ்ந்த சிந்தனையினால் தெளிவாகாத உண்மைகள் பலவற்றைத் தொழுகையின் நடுவில் புரிந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு நிச்சயமாக உண்டு.

வேறு நேரங்களில் கற்பனைக்கும் எட்டாத நுட்பமான உண்மைகள் பலவற்றை இறைவணக்கத்தின் மத்தியில் மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்டவர்கள் எத்தனையோ பேர்! இந்த வழியில் உலகத்துக்குக் கிடைத்திருக்கும் தத்துவக் கருத்துக்கள் எண்ணற்றவை!

இங்கே, ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்து மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலகப் புகழ் பெற்ற ஓர் ஆசிரியரைப் பற்றிய செய்தியொன்று என் நினைவுக்கு வருகிறது.

இதோடு ஆறாம் பகுதி நிறைவு பெறுகிறது.

இறைவணக்கம் அடுத்த பகுதியில் தொடரலாம். நன்றி வஸ்ஸலாம்.