IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 06

இதை நீங்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளத் தீர்மானித்தால் ஒன்று செய்யுங்கள்: தெளிந்த சிந்தனையும் எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற மனவலிமையும் படைத்த ஒரு மனிதனை மக்களில் தேர்ந்தெடுங்கள். அவனுக்குப் பிறந்த குழந்தை ஒன்றை, பெற்றவனின் அனுமதியுடன், தூக்கிக்கொண்டு வந்துவிடுங்கள். குழப்பமும் அவசரமும் எடுத்த வேலையை நடுவில் நிறுத்திவிட்டு நடுத்தெருவில் நின்று வேடிக்கை பார்க்கிற மனப்பான்மையும் கொண்ட ஒரு மனிதனிடம் அந்தக் குழந்தையைக் கொடுத்து வளர்க்கச் சொல்லுங்கள். பெற்றவனைப் பற்றிய எந்தச் செய்தியும் அந்தக் குழந்தைக்குத் தெரியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கும் அதை வளர்ப்பவனுக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்படுவதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வையுங்கள்.
அந்தக் குழந்தை வளர்ந்து இளைஞன் என்ற நிலைமைக்கு வந்ததும் அவன் சொல்லையும் செயலையும் கூர்ந்து கவனியுங்கள், சகவாசமும் பழக்கமும் எவ்வளவு சக்தி படைத்தவை என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அந்த இளைஞன் வளர்த்தவனுக்கு மறுபதிப்பாக இருப்பானே தவிர, பெற்றவனின் குணத்தையோ செயலையோ செய்யும் முறையையோ அவனிடம் காணமுடியாது.
தத்துவ ஞானியினால் அன்புடன் வளர்க்கப்படும் குழந்தை அதைப் பெற்றெடுத்தவன் பைத்தியக்காரனாக இருந்தாலும், பிற்காலத்தில் தத்துவத்தின் பிரதிநிதியாக மாறுமேயல்லாமல் பைத்தியத்தின் வாரிசாக அமையாது. நிலை கொள்ளாத மனமும் குறிக்கோள் இல்லாத செயலும் கொண்ட ஒருவனுக்குப் பிறக்கும் குழந்தை, நேர் எதிரான மனமும் செயலும் படைத்த ஒருவனால் மிக இளம் வயதிலிருந்தே வளர்க்கப்பட்டால், பிற்காலத்தில் நீங்கள் ஒரு செயல்வீரனை – குறிக்கோளுக்காக வாழ்கிற ஒரு மனிதனை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். அங்கே நீங்கள் பெற்றவனின் முத்திரையை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
நபித்தோழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் அவர்கள் இஸ்லாத்துக்கு வந்து பெருமானாருடன் நெருக்கமான உறவு கொள்வதற்கு முன்னர் எப்படி வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதையும் ஒன்றாகச் சேர்த்து வைத்துச் சிறிதுநேரம் சிந்தனை செய்து பாருங்கள். பொருத்தமான சூழல் அமைந்தால் – அல்லது அதனை அமைத்துக் கொள்ள முடிந்தால் ஒரு மனிதன் எந்த மனப் பண்பையும் வளர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிடுவீர்கள்.
எனவே ஒருவன் சிதைந்துபோன சிந்தனையுடன் சிதறிப்போன குறிக்கோளுடன் வாழ்ந்து கொண்டிருக் கிறான் என்றால் அதற்குக் காரணம் பெற்றோரிடமிருந்து அவனுக்குக் கிடைத்த பரம்பரை வித்து அல்ல பழக்கத்தினால் தேடிக் கொண்ட சொத்து.
ஆனால் ஒன்று பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து வருகிற உயிரணுக்களுக்கு எந்தச் சக்தியும் கிடையாது என்று நான் கூறுவதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். அது என் கருத்தல்ல. அது சரியான சுருத்துமல்ல.
பாழ்பட்டுப்போன மனப்பண்பு படைத்த பெற்றோ ருக்குப் பிறந்த ஒருவன் தன்னைத்தானே நொந்து கொண்டு முயல்வதற்கு முன்பே தோல்வியைத் தனதாக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. முறையான பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் சிறந்த மனப்பண்புகளை அவன் நிச்சயமாக வளர்த்துக் கொள்ள முடியும். இதுதான் என் கருத்து.
தேனீயின் தொடர்ந்த ரீங்காரப் பயிற்சிக்கு உட்படு வதன் மூலம் புழுக்கள் தேனீக்களாக மாறுகின்றன என்பது உண்மைக்கு மாறான கதையல்ல!

தேவையான பண்புகள்
மனப்பண்புகளைப் பக்குவப்படுத்துகிற ஆத்மிகப் பயிற்சிகளைப் பற்றி விரிவாக எழுதுவதற்கு முன்னர் தொழுகையின் மூலம் இறைவனை நெருங்க நினைக் கிறவர்கள் எந்தப் பண்புகளை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கிக் கூறுவது நல்லது என்று எண்ணுகிறேன்.
இந்தப் பண்புகளில் மிக முக்கியமான ஒருமித்த மன நிலை வேண்டுமானால், ‘ஈடுபட்டிருக்கும் வேலை ஒன்றைத் தவிர்த்து வேறு. எதிலும் திரும்பாத ஆழ்ந்த கவனம்’ என்று வைத்து கொள்ளுங்கள். அல்லது, ‘சுற்றத்தையும் சூழலையும் கட்டோடு மறந்து எடுத்த காரியத்தில் லயிப்புக் கொள்ளும் மனப்பக்குவம்’ என்று சொல்லிக் கொள்ளுங்கள்.
இறை வணக்கத்துக்கு இந்தப் பண்பு ஆணி வேர் போன்றது என்பதை நாம் உணர்ந்து கொண்டோம். இது இல்லை என்றால் நீங்கள் நிறைவேற்றும் தொழுகை உங்களுக்கு முழுப்பயனைத் தேடி தராது என்பதையும் தெரிந்து கொண்டீர்கள். ஒருவன் எங்கு தொழுதாலும், எப்படித்தொழுதாலும் இந்தப் பண்பை அவன் அலட்சியம் செய்ய முடியாது என்பதை ஆரம்பத்திலேயே விரிவாக எடுத்துக் கூறிவிட்டேன். ஆனால் இறை வணக்கத்துக்கு இந்தப் பண்பு மிக அவசியமானது தான் என்றாலும், இந்த ஒரே ஒரு பண்பை வைத்து கொண்டு தொழுகையின் முழுப்பயனை எதிர்பார்க்க முடியாது.
ஏனெனில் தொழுகை முழுமை பெறுவதற்கு வேறு சில பண்புகளும் தேவைப்படுகின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்று இல்லை என்றால், நிறைவேற்றப்படும் தொழுகை நிச்சயமாகக் குறைபாடுள்ளதாகிவிடும்.
புரிந்து கொள்ளுங்கள்
எனவே இப்போது நமக்கு எதிரில் வந்து நிற்கும் கேள்வி இதுதான் ‘ஆழ்ந்த கவனம் என்றும் ஒருமித்த மனநிலை என்றும் சொல்லப்படுகிற பண்பைத் தவிர்த்து மற்றப்பண்புகள் யாவை?’
தொழுகைக்குத் தேவையான பண்புகளில் முழுக் கவனத்துக்கு முதலிடம் கொடுத்தால், அடுத்த இடத்துக்கு வருவது புரிந்து கொள்ளும் சக்தி. வேண்டுமானால் ‘தெளிவு’ என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தொழும்போது ஒருமித்த கவனத்துடன் இருந்தால் மட்டும் போதாது. நீங்கள் செய்கிற செயல்கள் ஒவ்வொன்றையும் சொல்கிற வார்த்தைகள் அனைத்தையும் நன்கு புரிந்து கொள்வதும் அவசியமாகும்.
தன் தொழுகையிலிருந்து அவன் புரிந்து கொள்ளும் அளவுதான் அவனுக்கு நன்மை கிடைக்கும்.”



