IRAI VANAKAM | இறை வணக்கம் | S ABDUL WAHAB BAQAVI – EPISODE 04

ஒழுக்கம் நிறைந்த சட்ட மேதைகளிடமிருந்தும் மறுமையைக் குறியாகக் கொண்டு வாழ்ந்த அறிஞர்களிடமிருந்தும் நமக்குக் கிடைத்திருக்கிற இப்படிப்பட்ட கருத்துக்கள் எண்ணற்றவை. இவை யாரோ ஒருவர் எங்கோ ஓரிடத்தில் சொல்லிவைத்த கருத்துக்கள் அல்ல. இவை அறிஞர்களின் ஒருமித்த ஒப்புதலைப் பெற்றவை. எனவே இவற்றை நீங்கள் புறக்கணித்தால் உங்கள் புறக்கணிப்புக்கு உங்களால் நிச்சயமாகக் காரணம் காட்ட முடியாது!
இதுவரை நான் கூறிவந்த செய்திகள் உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடியோடு அழித்து உங்கள் மனத்தைத் தெளிவாக்கியிருக்கும் என்று எண்ணுகிறேன். வினா எழுப்பிய நேரத்தில் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தது போல். என் கருத்து சட்டமேதைகளின் கருத்துக்கு முரண்பட்டதல்ல என்பதையும் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனினும் என் கூற்றின் சாரத்தை அடியில் தருகிறேன்.
தொழுகை என்பது, இந்த நூலின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டதுபோல், இறை வணக்கத்தின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. வெளிச்செயல்களும் உள்ளத்துப் பண்புகளும் ஒன்றாக இணையும்போது தொழுகை முழுமை பெறுகிறது. இதனை முழுக்கவனம் இல்லாமல் நிறைவேற்ற முடியாது. முழுக்கவனம் என்பது தொழுகைக்கு உயிர் போன்றது. உங்கள் தொழுகை சிறிதும் கவனம் இல்லாது நிறைவேற்றப்பட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படாது.
உங்கள் தொழுகை சிறிதேனும் பயனளிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், குறைந்தது தொழுகையின் துவக்கத்திலேனும் முழுக்கவனம் இருக்க வேண்டும். உங்கள் தொழுகை முழுவதும் உயிரோட்டம் பரவி நிற்க வேண்டும் என்று ஆசைபடுகிறீர்களா? அப்படியானால், தொழுகைக்குத் தயாரான நேரத்திலிருந்து அது முழுமை பெறுகிற வினாடிவரை உங்கள் கவனம் தடம்புரண்டு வேறுபட்ட காரியங்களில் நுழையாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
சிந்திக்கத் தெரிந்த உங்களுக்கு இதற்கு மேல் நான் எழுத வேண்டிய அவசியமில்லை.

மீண்டும் தொடர்வோம்!
இப்போது நம் சிந்தனையை மீண்டும் தொடரப் போகிறோம். உங்கள் வினாவினால் தடைப்பட்டுப் போன செய்திகளை அடுத்து ஆராயப் போகிறோம். எனவே முதலில் நான் கூறிய செய்திகளை உங்கள் எண்ணத்தில் பசுமைப் படுத்திக்கொள்ளுங்கள். விருப்பு வெறுப்பற்ற வெள்ளை மனத்துடன் படித்துணர முற்படுங்கள். இந்த மனப்பான்மை எழுதப்பட்ட ஏடுகளில் மறைந்து நிற்கிற எழுதப்படாத அறிவுகளை எல்லாம் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும்; வரிகளுக்கிடையே ஒளிந்து கொண்டிருக்கிற உட்பொருட்கள் அனைத்தையும் தெளிவாக்கி வைக்கும்.
தொழுகையின் புறச் செயல்களையும் அப்போது இருக்க வேண்டிய மனப் பண்புகளையும் முறையே உடலுக்கும் உயிருக்கும் ஒப்பிட்டுக் கூறினேன் அல்லவா? இப்போது அதைப் பற்றிக் கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள்
ஒரு மனிதன் தெருவோரத்தில் செத்துக் கிடக்கிறான். அந்தச் சடலத்தில் அறவே உயிர் இல்லாத காரணத்தினால், அந்த மனிதனுக்கு அவன் பெற்றோர் இட்ட பெயர் இப்போது பொருந்தாது. நீங்கள் அறவே கவனம் இல்லாத நிலையில் தொழுகையை நிறைவேற்றினால், உங்கள் தொழுகை இந்த வெற்றுச் சடலத்துக்கு நிகரானது. நீங்கள் தொழுகை என்று நினைத்துக்கொண்டிருக்கும் செயல் முறைக்குத் தொழுகை எனும் பெயர் பொருந்தாது. இந்தத் தொழுகையைச் சட்டமும் ஏற்றுக் கொள்ளாது; ஞானமும் அங்கீகரிக்காது.
இந்தத் தொழுகையினால் உங்கள் கடமை நிச்சயமாக நிறைவேறாது என்பது மட்டுமல்ல, நேரத்தைப் பாழடித்த குற்றமும் உங்கள் மீது சுமத்தப்படலாம்.
மற்றொரு மனிதன் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையில் அசைவற்றுக் கிடக்கிறான். மெதுவான நாடித்துடிப்பும் மூச்சோட்டமும் தான் அவனுக்கு உயிர் இருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள். எனவே நீங்கள் பெயரைச் சொல்லி அவனைக் கூப்பிடலாம். சிறிதளவேனும் உயிரோட்டம் இருப்பதால் அவனைப் பிரேதம் என்று குறிப்பிட முடியாது. துவக்கத்தில் மட்டும் கவனம் இருந்தால் போதும் சட்டத்தை ஆதாரமாகக் கொண்டு நீங்கள் நிறைவேற்றும் தொழுகைக்கு இது உதாரணம்.
இப்படி நீங்கள் தொழும்போது உங்கள் தொழுகையை நிச்சயமாகச் சட்டம் ஏற்றுக் கொள்ளும். உங்கள் தொழுகை நிறைவேறவில்லை என்றோ, தொழுகை எனும் கடமையைப் புறக்கணித்தவன் என்றோ உங்களுக்குப் பாதகமாக அது ‘ஃபத்வா’ கொடுக்காது. ஆனால் மார்க்கத்தின் உட்பொருளை உணர்ந்த ஞானிகள் இத்தகைய தொழுகைக்கு ஒப்புதல் கொடுக்க மாட்டார்கள்!
கொஞ்சம் ஏறிட்டுப் பாருங்கள். உங்களை நோக்கி ஒருவன் விரைந்து வந்து கொண்டிருக்கிறான்.
அலையாத பார்வையும் துடிப்பான நடையும், அவன் ஏதோ ஒரு குறிக்கோளை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறான் என்று கூறுகின்றன. உங்கள் அருகில் வந்த அவன் சிறிது நேரம் உங்களோடு உரையாடுகிறான். அவன் பேச்சு மற்றவர்களின் பேச்சுக்கு முற்றிலும் மாறுபட்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்கிறீர்கள். அவன் சொல்லிலும் செயலிலும் மட்டுமன்றி எண்ணத்திலும் தீர்மானத்திலும் உயிர்த் துடிப்பு விரிந்து கிடப்பதைப் பார்க்கிறீர்கள். உலகத்து வெற்றிகள் அனைத்தும் இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்கிறீர்கள்.

அனைத்துக்கும் மேலாக தான் ஈடுபட்டிருக்கும் வேலை ஒன்றைத் தவிர்த்து வேறு எதிலும் அவன் மனம் தாவிப் பாய்வதில்லை என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள்.
ஒருமித்த கவனத்துடன், சிதறாத எண்ணத்துடன் நீங்கள் தொழுகையை நிறைவேற்றினால் உங்கள் தொழுகையை உயிர்த் துடிப்பு நிரம்பிய இந்த மனிதனுக்கு ஒப்பிடலாம். இந்தத் தொழுகையை ஞானிகள் மட்டுமின்றி, சட்ட மேதைகளும் அங்கீகரிக்கிறார்கள். ஏனெனில் சட்டம் இயற்றியவர்கள், சற்று முன்னர் நான் குறிப்பிட்டது போல், ‘தொழும்போது துவக்கத்திலேனும் கவனம் இருக்க வேண்டும்’ என்றுதான் கூறியிருக்கிறார்களே தவிர, ‘தொழுகை முழுவதும் ஆழ்ந்த கவனம் இருக்கக் கூடாது’ என்று எந்த நூலிலும் அவர்கள் சொல்லவில்லை.
இது, சட்டங்களையும் அவற்றிற்கு அடிப்படையான திருமறையின் கருத்துக்களையும் பெருமானாரின் வாக்குகளையும் ஆழ்ந்து ஆராய்கிறவர்கள் மறுக்கத் துணியாத உண்மையாகும்.



