Irai Vanakam | இறை வணக்கம் | S Abdul Wahab Baqavi – Episode 02 ‪

தொழுகை என்பது வெளிச்செயல்களால் முழுமை பெறுவதில்லை என்ற உண்மை. நபித்தோழர் ஒருவரின் வினாவுக்குப் பெருமானார் கொடுத்த விடையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. “இறைவனை எப்படி வணங்க வேண்டும்?” என்று அந்த நபித் தோழர் கேட்டபோது பெருமானார் கூறினார்கள்: 

“இறைவனை நீர் பார்ப்பதுபோல் வணங்க வேண்டும். நீர் அவனைப் பார்ப்பவராக இல்லாவிட்டால், அவன் உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வோடு வணங்க வேண்டும்.” – இங்கு தொழுகையின் உயிர் என்று நான் குறிப்பிட்ட மனப்பண்பு சுட்டிக் காட்டப்படுகிறது. 

இதே உண்மை மற்றொரு நபிக் கருத்தில் இப்படித் தெளிவாக்கப்படுகிறது: “தொழுகை என்பது மூமின்களுக்கு ‘மிஹ்ராஜ்’ ஆகும்.” 

மிஹ்ராஜ் என்று சொல்லப்படுகிற ஆத்மிகப் பயணத் தில் பெருமானார் இறைவனைத் தரிசித்தது போல், தொழுகையில் ஈடுபடுகிற ஒவ்வொரு மனிதனும் இறைவனைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தோற்றுவித்துக் கொள்ள வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படும் கருத்து. 

இத்தகைய மனநிலை உங்களுக்கு இல்லை என்றால் அல்லது அதனை உங்களால் தொழுகையின்போது உண்டாக்கிக் கொள்ள முடியவில்லை என்றால் உங்கள் தொழுகையிலிருந்து உங்களால் பெரும் பயன் எதையும் எதிர்பார்க்க முடியாது. உயிரோட்டமில்லாத வெற்றுத் தொழுகையில் எந்தப் பயனும் கிடையாது என்பது என் கருத்தல்ல. ஆனால் எந்தப் பயன்கள் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாம் தொழுகையைக் கடமையாக்கியிருக்கிறதோ அந்தப் பயன்களை நிச்சயமாக உங்களால் அடைய முடியாது இதுதான் என் கருத்து: 

“அறிந்தவர்களின் தூக்கம் அறியாதவர்களின் வணக்கத்தைவிடச் சிறந்தது” என்று பெருமானார் கூறியிருப்பது உங்கள் சிந்தனைக்குரிய ஒன்று.

எனவே தொழுகையின் வெளிச் செயல்களையும் பொருள் தெரியாமல் – கவனம் இல்லாமல் பழக்கத்தினால் சொல்லப்படுகிற வார்த்தைகளையும் விளக்குவதற்கு முன்னர், தொழுகையின்போது ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய -இருந்தே தீரவேண்டிய மனப் பண்புகளை விரித்துக் கூறுவது நல்லது என்று எண்ணுகிறேன். 

அடுத்து வரும் செய்திகளை நீங்கள் அலைபாயாத கவனத்துடன் படிக்கவேண்டும். மனித வாழ்க்கையில் இத்தகைய ஆழ்ந்த கவனத்துக்குப் பெரிதும் முக்கியத்துவம் உண்டு. சிதறியோடும் சிந்தனையினால் எந்த மனிதனும் எதையும் சாதித்ததில்லை. இந்தப் பண்பு, நான் எழுதுவதைப் புரிந்து கொள்வதற்கு மட்டுமன்றி, அன்றாட வாழ்க்கையில் நீங்கள் செய்கிற எல்லாக் காரியங் களுக்கும் அடிப்படையானது. நீங்கள் மற்றவரிடம் உரையாடும் போதும், மற்றவர்கள் தம் எண்ணங்களை உங்களிடம் கூறும்போதும், இது தவிர்க்க முடியாத ஒன்று. ஏனெனில் இந்த மனப்பக்குவம் இல்லை என்றால் – அல்லது போதிய அளவுக்கு இல்லை என்றால் உங்கள் உரையாடல் அவர்களுக்குத் தண்டனையாக அமையும்; அவர்கள் கூறுவது உங்களுக்குக் குழப்பத்தைத் தோற்றுவிக்கும். 

அன்றாட வாழ்க்கையில் முழுக்கவனம் இல்லாமல் ஒருவரோடு ஒருவர் உரையாடுவது சாத்தியமில்லை என்றால், வினாடிக்குப் பத்து இடங்களைத் தொட்டுத் இறை வணக்கம் திரும்புகிற சிந்தனையைத் துணைகொண்டு உங்களால் இறைவனோடு எப்படி உரையாடல் நடத்த முடியும்? 

“தொழுகிற மனிதன் தன் நாயனோடு உரையாடுகிறான்” என்று பெருமானார். கூறியிருப்பதைச் சற்று நினைத்துப் பாருங்கள். தொழுகையின் போது நீங்கள் விழிப்புணர்வோடு இருப்பது எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 

எனவே நான் சொல்கிறேன்: நீங்கள் மேற்கொள்ளும் தொழுகையில் முழுக் கவனம் இல்லை என்றால் உங்கள் தொழுகை நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படாது. குறிப்பிட்ட சில அசைவு களாலும் பழக்கத்தின் வலிமைக்கு அடிமைப்பட்டு அரபி வார்த்தைகள் சில உங்களுக்கே தெரியாமல் உங்கள் நாவிலிருந்து வெளிவருவதாலும் கடமை நிறைவேறி விட்டது என்று எண்ணுகிறீர்களா? ‘ஆம்’ என்று நீங்கள் பதிலளித்தால் அதற்குப் பொருள், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்! 

தொடரும் பகுதி 03 – 29 செப் 2025 திங்கள்கிழமை காலை மணி 11:11
@ ஹஜ்ரத் Spotify சேனல். Stay Tune