Irai Vanakam | இறை வணக்கம் | S Abdul Wahab Baqavi – Episode 02

‘ஃபிக்ஹ்’ என்று அரபி மொழியில் சொல்லப்படுகிற சட்டத்துறை குறித்து நான் எழுதிய நூல்களில் தொழுகையைப் பற்றிய செய்திகள் அனைத்தும் இடம் பெற்றிருக்கின்றன. அதன் அடிப்படைச் சட்டங்களிலிருந்து மிக அரிதாகத் தோன்றக்கூடிய பிரச்சினைகள் வரை அனைத்தும் மிகத் தெளிவாக அங்கே விளக்கப்பட்டிருக்கின்றன – ‘Fatwaa’ எனப்படும் மார்க்கத் தீர்ப்பு வழங்கிற அறிஞர்களுக்கு அது ஒரு கஜானாவாக இருக்க வேண்டும் என்பதற்காக!
அங்கே சொல்லப்பட்ட செய்திகளை எல்லாம் இங்கே நான் எடுத்துக் கூறப்போவதில்லை. அறிவுத்தாகம் கொண்டவர்கள் அந்த நூல்களைப் படித்துணர்ந்து அமைதி அடையட்டும்!
இந்த நூலில் தொழுகையை நாம் முற்றிலும் மாறுபட்ட கோணத்திலிருந்து ஆராய வேண்டும். நேராக நிற்பது. முழங்கால்களில் கைகளை வைத்து குனிவது, சிரத்தைத் தரையில் வைப்பது,
நேராக உட்கார்வது அவ்வப்போது சில வார்த்தைகளைச் சொல்வதன் மூலம் இறைவனைத் துதிப்பது முதலியவை தொழுகையில் ஒரு பகுதியாகும். இந்தச் செயல்களைச் செய்யும்போது மனதில் குறிப்பிட்ட சில பண்புகள் திரண்டு உருவாக வேண்டும்; இது தொழுகையில் மறுபகுதி. இந்த இரு பகுதிகளும் முறையாக இணையும்போது தொழுகை முழுமை பெறுகிறது. முன்னதைத் தொழுகையின் உடல். என்றால் பின்னதை அதன் உயிர் என்று குறிப்பிடலாம். இன்னும் சொல்லப் போனால், பின்னது இல்லை என்றால் முன்னதைத் தொழுகை என்றே கூற முடியாது.
ஏனெனில் உயிரற்ற மானிடச் சடலத்தை ‘மனிதன்’ என்று குறிப்பிடமுடியாது! தொழுகை பற்றிய சட்ட நூல்களில் முற்பகுதி மட்டும் விரித்துரைக்கப்படுகிறதே தவிர, மறு பகுதியைப் பற்றிய அக்கறை அதிகமாகக் காணப்படவில்லை. அத்துடன் முற் பகுதியிலுள்ள மர்மங்களும் அங்கே அலட்சியம் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே,
இந்த நூலில் தொழுகையின் வெளிச் செயல்களை மட்டுமன்றி அப்போது இருக்கவேண்டிய மனப் பண்புகளையும் விளக்கப் போகிறேன். உயிர் இல்லாமல் உடல் இயங்க முடியாது என்பது உண்மைதான். என்றாலும் உடல் இல்லை என்றால், உயிர் தான் ஏற்றுக் கொண்ட வேலையை உலகில் நிறைவேற்ற முடியாது.



